ttv dhinakaran on sengottaiyan statement PT
தமிழ்நாடு

“ஜெயலலிதாவின் தொண்டனாக செங்கோட்டையன் கருத்தை ஏற்கிறேன்; இபிஸ் அதிமுகவை..” - டிடிவி தினகரன்

செங்கோட்டையன் மூத்த அதிமுக நிர்வாகி, கட்சி தொடங்கியதில் இருந்து இருக்கிறார், 77 முதல் எம்எல்ஏவாக உள்ளார், அவரது உணர்வை அவர் வெளிப்படுத்தியுள்ளார் - டிடிவி தினகரன்

PT WEB

அத்திக்கடவு அவினாசி திட்டக்குழு சார்பில் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்
கலந்துகொள்ளாத விவகாரம் பேசுபொருளாகியுள்ளது. இது தொடர்பாக பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அத்திக்கடவு அவினாசி திட்ட பாராட்டு விழாவை செங்கோட்டையன் புறக்கணித்தது குறித்த கேள்விக்கு விரிவாக பதில் அளித்தார்.

“அத்திகடவு அவினாசி திட்டம் வர காரணமாக இருந்த ஜெயலலிதாவின் படமோ, எம்ஜிஆர் படமோ இடம் பெறாத காரணத்தால் செல்லவில்லை என்று ஜெயலலிதாவின் தொண்டனாக செங்கோட்டையன் கூறியுள்ளது சரியானது தான். அவரது கருத்தை நானும் ஜெயலலிதாவின் தொண்டனாக ஏற்கிறேன்.

செங்கோட்டையன் மூத்த அதிமுக நிர்வாகி, கட்சி தொடங்கியதில் இருந்து இருக்கிறார், 77 முதல் எம்எல்ஏவாக உள்ளார், அவரது உணர்வை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

அதிமுகவிற்கு 2026ல் மூடு விழா நடுத்துவார் எடப்பாடி பழனிச்சாமி என்று நான் தொடர்ந்து கூறி வருகிறேன். சின்னமும் கட்சியும் அவரிடம் இருப்பதால் அதிமுக தொண்டர்கள் யாரும் வாய்மூடி மௌனமாக இருக்கக் கூடாது என்று நான் கூறி வருகிறேன். அதை ஏற்கும் விதத்தில் தான் செங்கோட்டையன் வெளிப்பாடு என்று நான் நினைக்கிறேன்.

தற்போது அதிமுகவில் உள்ளவர்கள் அதை உணர தொடங்கிவிட்டார்கள் என்று தான் நான் நினைக்கிறேன். தன்னை காப்பாற்றிக் கொள்வதற்கு அதிமுகவின் கேடயமாக எடப்பாடி பழனிச்சாமி பயன்படுத்த வருகிறார். இதே நிலையை எடப்பாடி தொடர்வதற்கு அதிமுகவில் உள்ளவர்கள் காவடி தூக்கினால் 2026ல் அதிமுகவிற்கு எடப்பாடி பழனிச்சாமி மூடுவிழா நடத்துவார் என்பதை அதிமுகவில் உள்ள கட்சியினர் தற்போது உணரத் தொடங்கியுள்ளனர். அவர்கள்தான் இதனை புரிந்து கொள்ள வேண்டும்”

என்று டிடிவி தினகரன் பேசியுள்ளார்.