மதுரை மாவட்டம் மேலூர் அருகே அமமுக பிரமுகர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அ.வல்லாளப்பட்டியைச் சேர்ந்த அமமுக பேரூர் கழக பொருளாளரும், முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவருமான அசோகன், நண்பர்கள் 3 பேருடன் நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் 3 பேர், உடனிருந்த நண்பர்களை தள்ளிவிட்டு, அசோகனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர்.
இதில் அசோகன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தகவறிந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்து, குற்றவாளிகளை தேடி வருகின்றனர். அசோகன் 2 நாட்களுக்கு முன்னர் தான் அமமுகவின் பேரூர் கழக பொறுப்பாளாராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இந்த கொலை நடந்திருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலையாளிகளை உடனடியாக கைதுசெய்ய வலியுறுத்தி உறவினர்களும் அமமுகவினரும் மறியலில் ஈடுபட்டனர்.