பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் புதிய தலைமுறை
தமிழ்நாடு

கோவை | திடீர் பணிநீக்கம் செய்த ஐ.டி நிறுவனம்... நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

கோவையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள் பலரை, திடீரென வேலையை விட்டு நீக்கியுள்ளது ஒரு நிறுவனம். இதனால் தங்களுக்கு நியாயம் வேண்டி நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

PT WEB

செய்தியாளர் : பிரவீண்

கோவை ஆர் எஸ் புரம் மற்றும் சுங்கம் பகுதியில் focus edumatics என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வந்துள்ளது. அமெரிக்காவைச் சார்ந்த இந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்த நூற்றுக்கணக்கான பணியாளர்களை எந்தவித முன் அறிவிப்பும் இன்றி வேலையை விட்டு நீக்கி உள்ளனர்.

பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

இதையடுத்து, “திடீரென எங்களை பணியில் இருந்து நீக்கிய அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மூன்று மாத கால சம்பள தொகையை பெற்றுத் தர வேண்டும். 5 ஆண்டுகளுக்கும் மேல் பணி புரிந்து வருபவர்களுக்கு settlement, graduvity உள்ளிட்டவற்றைப் பெற்றுத் தர வேண்டும்” எனக் கோரி அந்நிறுவனத்தில் பணியாற்றிய இளைஞர்கள் பலரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்துள்ளனர்.

முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இதுபற்றி நம்மிடையே கூறுகையில், “கடைநிலை ஊழியர்களில் இருந்து உயர்பதவியில் இருப்பவர்கள் வரை ஆயிரம் பேர் வரை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நிறுவனம் மூடப்பட்டு இருப்பதாக எங்களுக்கு மின்னஞ்சல் மட்டும் வந்துள்ளது.

நடப்பு மாதத்தில் சம்பளம் மற்றும் வேலை நீக்கத்திற்கான காரணத்தை தெரிவித்து அதற்கான சான்றிதழ்களை வழங்க வேண்டும். பணியில் இருந்து விலகாத நிலையிலும் அனைவருக்கும் விடுப்பு ஆணை அனுப்பப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. மேலும் Abscond என குறிப்பிட்டு இருப்பதால் அடுத்த பணி இடத்தில் சிக்கல் ஏற்படும். எனவே உடனடி நடவடிக்கை தேவை” என கவலை தெரிவித்து உள்ளனர்.