கணவர் விபரீத முயற்சி  pt desk
தமிழ்நாடு

ஆம்பூர் | ரூ.15 லட்சம் கடன் வாங்கிக் கொண்டு தலைமறைவான மனைவி – கணவர் விபரீத முயற்சி!

ஆம்பூரில் ரூ.15 லட்சம் பணத்தை கடன் வாங்கிக் கொண்டு மனைவி தலைமறைவான நிலையில், கடன் கொடுத்தவர்கள் தொந்தரவு காரணமாக கணவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அவர் ஆம்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

PT WEB

செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சிக்கு உட்பட்ட பிலால் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஃபாரூக். இவருக்கு மன்சூரா பர்வீன் என்பவருடன் திருமணமாகி 4 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், மன்சூரா பர்வீன், தனக்கு தெரிந்த உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் பெயரில், சுய உதவிக்குழுக்கள் மற்றும் பல்வேறு வங்கிகளில் சுமார் 15 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது தாய் மற்றும் தந்தையுடன் மன்சூரா பர்வீன் தலைமறைவாகியுள்ளார்..

மனைவி –கணவர்

இதையடுத்து கடன் கொடுத்த தனியார் வங்கி ஊழியர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் கடனை திருப்பிக் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். இதனால் அதிக மன உளைச்சலுக்கு ஆளான ஃபாரூக் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அவரை மீட்ட அவரது குடும்பத்தினர் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்,

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இச்சம்பவம் குறித்து ஆம்பூர் நகர காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் ஆம்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.