செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கருவனூர் கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள் 90க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து திருப்பதிக்கு பாதயாத்திரை சென்று கொண்டிருந்தனர். அப்போது, இன்று காலை திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பகுதியில் உள்ள பெங்களுார் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பக்தர்கள் நடந்து சென்ற போது, சரக்கு வாகனம் திடீரென பாதயாத்திரை இரண்டு பெண் பக்தர்கள் மீது மோதியுள்ளது,
இதில், இருவரும் படுகாயமடைந்த நிலையில், உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு, சிகிச்சையிற்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், அங்கு சிகிச்சை பலனின்றி புஷ்பா என்பவர் உயிரிழந்த நிலையில், லட்சுமிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற சரக்கு வாகன ஓட்டுநர் செங்கோட்டையன் என்பவரை துரத்திப் பிடித்த பொதுமக்கள் ஆம்பூர் கிராமிய காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில், சரக்கு வாகன ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்து, விபத்து ஏற்படுத்திய சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.