குடியாத்தம் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவில் அதிமுக கூட்டணிக் கட்சியினர் மற்றும் திமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று மக்களவை மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகள் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் ஒரே கட்டமாக நடைபெற்று வருகின்றன. மதியம் மூன்று மணி நிலவரப்படி, தமிழகத்தில் 52.02% வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை பொருத்தவரையில் 55.97% வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் இடைத்தேர்தல் நடைபெறும் வேலூரிலுள்ள ஆம்பூர் மற்றும் குடியாத்தம் தொகுதிகளில் மோதல் மற்றும் தடியடி நடத்தப்பட்டுள்ளது.
ஆம்பூர் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் பாலசுப்ரமணியனின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் அங்கு ஏற்பட்ட பிரச்னையால், காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதுமட்டுமின்றி காலை முதல் அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்று வந்த குடியாத்தம் தொகுதியில் திடீரென திமுக மற்றும் அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது.
வாக்குச்சாவடியிலிருந்து நூறு மீட்டர் தொலைவில் இந்தப் பிரச்னை நடைபெற்றதால், அங்கே காவல்துறையினர் இல்லை எனக் கூறப்பட்டது. ஆனால் உடனே அங்கு காவல்துறையினர் விரைந்து வந்து நிலையைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். இதனால் அந்த இரண்டு தொகுதிகளிலும் சற்று பதட்டமான சூழல் ஏற்பட்டது.