செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ஆலங்குப்பம் கிராமத்தில் உள்ள சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையோரம் திருப்பத்தூர் வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில், வடக்கு மாவட்ட செயலாளராக ஓம் பிரகாசம் உள்ளார்.
இந்நிலையில், இன்று அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு நினைவஞ்சலி செலுத்தி விட்டு கட்சி நிர்வாகிகளுடன் ஓம் பிரகாசம் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது ஆலாங்குப்பம் தோப்பூர் திமுக கிளை செயலாளரும், ஆலாங்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவருமான கப்பல்துறை என்பவர் செல்போனில் தொடர்பு கொண்டு சாதி பெயரைச் சொல்லி மிரட்டி, கட்சி அலுவலகத்தை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் என சொல்லப்படுகிறது.
இதையடுத்து ஓம் பிரகாசம், தனது கட்சியினருடன் சென்று, திமுக கிளை செயலாளரும், ஊராட்சி மன்ற தலைவரின் கணவருமான கப்பல்துறை மீது ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.