ஆம்பூர் தனியார் உணவகத்தில் சேமியா ப்ரை கேட்டு உரிமையாளர் மற்றும் அவரது மகனை அதிமுக மற்றும் காங்கிரஸ் பிரமுகர்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில், பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலை ரயில் நிலையம் எதிரில் தனியார் உணவகம் நடத்தி வருபவர்கள் முகமது சர்தார் மற்றும் அவரது மகன் முகமது சாலீக். ஊரடங்கு காலம் என்பதால் உணவகத்தில் பார்சல் மட்டுமே வழங்கவேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் நிலையில், இன்று ஆம்பூர் அதிமுக 36-வது வார்டு கிளைக் கழகச் செயலாளர் தயாளன் மற்றும் முன்னாள் ஆம்பூர் நகர காங்கிரஸ் தலைவர் பிரபு ஆகியோர் கடைக்கு சென்று சேமியா ப்ரை வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
அப்போது கடை உரிமையாளர் முகம்மது சர்தாரின் மகன் முகம்மது சாலீக் சேமியா ப்ரை போன்ற உணவு வகைகள் எல்லாம் மாலை நேரங்களில் மட்டும்தான் கிடைக்கும் என்று சொல்லி இருக்கிறார். அதற்கு நீங்கள் எதற்கு ஓட்டல் வைத்துள்ளீர்கள் என்று கேட்டு முகமது சாலீக் மற்றும் கடையில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் மற்றும் குளிர்பானங்களை எடுத்தும் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மீது வீசியுள்ளனர்.
இதில், காயமடைந்த முகமது சாலீக் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தகவல் அறிந்து விரைந்து வந்த ஆம்பூர் நகர காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில், ஆம்பூர் 36-வது வார்டு அதிமுக கிளைச் செயலாளர் தயாளன் மற்றும் ஆம்பூர் காங்கிரஸ் முன்னாள் நகர தலைவர் பிரபு ஆகியோர் கடைக்குள் நுழைந்து தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக உள்ள பிரபு மற்றும் தயாளன் ஆகியோர் மீது ஆம்பூர் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்