தமிழ்நாடு

“தஞ்சை டூ மதுரை.. 140 கி.மீ வேகம்.. 1 மணி 50 நிமிடங்கள்..” - சீறிப்பாய்ந்த ஆம்புலன்ஸ்

“தஞ்சை டூ மதுரை.. 140 கி.மீ வேகம்.. 1 மணி 50 நிமிடங்கள்..” - சீறிப்பாய்ந்த ஆம்புலன்ஸ்

webteam

தஞ்சையில் விபத்தில் உயிரிழந்த இளம் பெண்ணின் கல்லீரலை 1 மணி நேரம் 50 நிமிடத்தில் மதுரை கொண்டு வந்த ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தஞ்சையில் நேற்று ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி 25 வயது இளம்பெண் பெண், தஞ்சை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர் முன்வந்தனர். இதனால் அந்த பெண்ணின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட கல்லீரல், மதுரை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 45 வயதுடைய நோயாளி ஒருவருக்கு பொருத்துவதற்காக தஞ்சையிலிருந்து மதுரைக்கு அவசர கால ஆம்புலன்ஸ் வாகனம் மூலமாக கொண்டு செல்லப்பட்டது.

கல்லீரலை காலம் தாழ்த்தாமல் கொண்டுவர வேண்டும் என்பதால் தஞ்சையிலிருந்து மதுரை வரையிலான போக்குவரத்தை சீர் செயும் பணியில் போக்குவரத்து காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டனர். தஞ்சை மீனாட்சி மிஷன் மருத்துவமனையிலிருந்து 190 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மதுரை அப்போலோ மருத்துவமனைக்கு 1 மணி நேரம் 50 நிமிடத்தில் கல்லீரல் கொண்டுவரப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அவசரகால ஆம்புலன்ஸ் வாகனம் முன்பாக ஒரு காவல்துறை வாகனம் பொதுமக்களை எச்சரித்தபடி சென்றது. மேலும் அனைத்து இடங்களிலும் காவல்துறையினர் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு எந்தவித இடையூறும் இல்லாத வகையில் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

கடும் போக்குவரத்து நெரிசல்களுக்கு மத்தியில் சாமர்த்தியமாக செயல்பட்டு உரிய நேரத்தில் ஒரு உயிரை காப்பாற்ற கல்லீரல் கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர், காவல்துறை மற்றும் மருத்துவ குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இதுகுறித்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சுப்ரமணியன் கூறும்போது “சராசரியாக 140 கிலோமீட்டர் வேகத்தில் வாகனத்தை ஓட்டி வந்தேன். ஒரு உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் கவனத்துடன் வாகனத்தை வேகமாக ஓட்டி வந்தேன். இதுபோன்ற சவால் நிறைந்த பணிகளை பல நேரங்களில் செய்திருக்கிறேன்.

நம்மால் ஒரு உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது என்பதை நினைக்கும்போது எனது ஓட்டுநர் பணியை நினைத்து பெருமையாக உள்ளது. இது மன நிம்மதியை தருகிறது. இதுபோன்ற அவசர காலங்களில் செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்களின் நிலையை அறிந்து பொதுமக்கள் போதிய ஒத்துழைப்பு தருகின்றனர். காவல்துறையினர் சரியான முறையில் வழிகாட்டி போக்குவரத்தை சரி செய்யும் பணியை திறம்பட செய்ததால் உரிய நேரத்தில் வர முடிந்தது” எனத் தெரிவித்தார்.