தமிழ்நாடு

ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களின் அபார துணிச்சல்..காப்பாற்றப்பட்ட இரட்டைக் குழந்தைகள்..!

ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களின் அபார துணிச்சல்..காப்பாற்றப்பட்ட இரட்டைக் குழந்தைகள்..!

webteam

சேலத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களின் கடின முயற்சியால் பிறந்து சில மணி நேரமே ஆன இரட்டைக் குழந்தைகளின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.

மேட்டூர் அரசு மருத்துவமனையில் வசந்தி என்பவருக்கு ஆண், பெண் என இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. சிறிது நேரத்தில் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து குழந்தைகளை சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதற்காக நவீன வசதிகள் கொண்ட ஆம்புலன்ஸ் சேலத்தில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. 

மேலும் இதுகுறித்து மேட்டூர் மற்றும் குஞ்சாண்டியூரில் உள்ள ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள், ஓட்டுநர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் குழந்தைகள் இருந்த ஆம்புலன்ஸுக்கு முன்பாக 3 அவசர ஊர்திகளை அனுப்பி போக்குவரத்தை சீர் செய்தனர். இதனால் இரட்டைக் குழந்தைகளும் தாயும் அரை மணி நேரத்தில் மேட்டூரிலிருந்து சேலம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 

தீவிர சிகிச்சைக்குப்பின் குழந்தைகள் நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தங்களின் கடின முயற்சியால் இரட்டைக் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு பொது மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.