தமிழ்நாடு

1000-க்கும் மேற்பட்ட விநாயகர் உருவங்கள்... பட்டதாரி மாணவரின் ஆச்சர்ய கலெக்‌ஷன்ஸ்!

1000-க்கும் மேற்பட்ட விநாயகர் உருவங்கள்... பட்டதாரி மாணவரின் ஆச்சர்ய கலெக்‌ஷன்ஸ்!

நிவேதா ஜெகராஜா

பொறியியல் பட்டதாரி மாணவரொருவர், பல ஆண்டுகளாக சேமித்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் உருவம் பொறித்த பலவித சிலைகளை காட்சிப்படுத்தி உள்ளார். அதுமட்டுமல்ல ஆங்கில எழுத்துக்களில் தானே விநாயகர் உருவங்களை வரைந்துள்ளார் அவர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர், அனு சுந்தர். 12 வயது வரை மகாராஷ்டிர மாநிலத்தில் வளர்ந்த இவர், அப்போதிலிருந்தே விநாயகர் சிலைகளை சேகரிக்கும் எண்ணத்துடன் இருந்துள்ளார். அத்துடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக பொறியியல் பட்டபடிப்பு படித்து முடித்த அனு சுந்தர், தொடர்ந்து விநாயகர் சிலைகளை சேகரிக்கும் எண்ணம் கொண்டிருந்திருக்கிறார்.

அந்த வகையில், தான் எங்கு சென்றாலும் வெளியூர்களில் தன் பார்வையில் படுகிற விநாயகர் பொரித்த உருவங்கள், சிலைகள், கீ செயின், சுவர் ஓவியங்கள் என பார்க்கிற எல்லா விநாயகர் குறித்த விஷயங்களையும் வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். அப்படியாக தான் சேகரித்த 1000-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஓவியங்கள் ஆகியவற்றை தன் வீட்டிலேயே அவர் காட்சிப்படுத்தி வைத்துள்ளார்.

மேலும் தனக்கு உள்ள ஓவிய ஆற்றலைப் பயன்படுத்தி ஆங்கில எழுத்துக்களில் விநாயகர் உருவங்களை வரைந்துள்ளார். சிறுவயது முதலே தனக்கு இது போன்ற சேகரிப்பு எண்ணம் ஏற்பட்டதால்தான், தான் இவ்வளவு விநாயகர் உருவம் பொறித்த சிலைகள் மற்றும் ஓவியங்களை சேகரிக்க முடிந்தது என்கிறார் அந்த இளைஞர். கள்ளக்குறிச்சி பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் இவர், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் வெவ்வேறு உருவங்களை சேகரிக்கும் எண்ணம் தனக்கு இருப்பதாகவும் தெரிவிக்கிறார்.