iron bird
iron bird file image
தமிழ்நாடு

இரும்புக் கழிவுகளில் பிறக்கும் பறவைகள்.. 1,500 கிலோ எடையில் தயாரான 3 சிற்பங்கள்!

யுவபுருஷ்

தென்னிந்தியாவின் மான்செஸ்டர், தமிழ்நாட்டின் INDUSTRIAL CAPITAL என பல்வேறு சிறப்புகளைக் கொண்ட கோவைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநகரப் பகுதிக்குள் அதிக குளங்களை கொண்ட நகரமாக விளங்கும் கோவையில், சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாகவும், குளக்கரைகளை அழகுற மாற்றும் விதமாகவும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கோயம்பத்தூர் ஸ்மார்ட் சிட்டி

அந்த வகையில் கோவை உக்கடம் பெரியகுளத்தில் WASTE TO WEALTH என்று, இரும்பு கழிவுகளை கொண்டு உருவாக்கப்பட்டு வரும் பறவைகளின் உருவங்கள் காண்போரை கவர்ந்து வருகின்றன.

மாநகராட்சியில் பயன்படுத்தப்படும் குப்பை வாகனங்கள், குடிநீர் வினியோக வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்களில் இருந்தும் பழுது நீக்க மாற்றப்படும் உதிரி பாகங்கள், SCRAP-க்கு கொண்டு செல்லப்படும் இரும்பு கழிவுகளை கொண்டு இந்த பறவை உருவங்கள் செய்யப்படுகின்றன. சுமார் 1500 கிலோ இரும்பு கழிவுகளை கொண்டு தற்போது மூன்று பறவைகள் செய்யப்பட்டுள்ளன.

பல்வேறு வெளிநாட்டு பறவைகளும் உள்நாட்டு பறவைகளும் அதிக அளவில் வந்து செல்லக்கூடிய ஒரு பகுதியாக விளங்குகிறது உக்கடம் பெரிய குளம். எனவே இந்த குளத்திற்கு வரும் பெலிக்கான் உள்ளிட்ட மூன்று பறவைகளின் உருவங்களை செய்ய மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது. இதற்காக அமைக்கப்பட்ட குழுவினர், சுமார் மூன்று வார காலங்களாக பணிகளை செய்து பறவைகளுக்கு முழு உருவம் கொண்டு வந்துள்ளனர்

இதுகுறித்து பேசிய சிற்ப கலைஞர் ராம்குமார், “இயந்திரவியல் துறையில் பிரதானமாக செய்யப்படும் WELDING, SHEET METAL WORKS போன்ற செயல்முறைகளைக் கொண்டு இந்த பறவைகள் உருவாக்கப்பட்டுள்ளன. பறவைகளுக்கு முழு உருவம் வந்துவிட்ட நிலையில் அடுத்த கட்டமாக SAND BLASTING செய்யப்படும். பணிகளின் போது பல்வேறு விதமான சவால்களை சந்தித்துள்ளோம், ஆனால் முழு உருவம் கிடைத்தபோது நல்ல மனநிறைவை கொடுத்துள்ளது” என்றார்.