கீழடி  புதிய தலைமுறை
தமிழ்நாடு

கீழடி ஆய்வை மேற்கொண்ட அமர்நாத் இடமாற்றம்.. அதிர்ச்சியில் தமிழகம்!

கீழடி அகழாய்வு மேற்கொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணன் நொய்டாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் இந்தியத் தொல்லியல் துறையின் சார்பில் அமர்நாத் ராமகிருஷ்ணன் மேற்கொண்ட இரண்டு அகழாய்வுகள் தொடர்பான ஆய்வறிக்கையை அவர் தாக்கல் செய்திருக்கும் நிலையில், ஆனால், இதில் சில விளக்கங்களைக் கோரி அந்த ஆய்வறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியது.

அதனை ஏற்க கூடுதல் ஆய்வுகள் தேவை என்றும், ஒரேயொரு கண்டுபிடிப்பு மட்டும் எல்லாவற்றையும் மாற்றிவிடாது என்றும் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறி இருந்தார். இந்த விவகாரம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. பல அரசியல் தலைவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இன்று தனது சமூக வலைதளப்பக்கத்தில், இதுகுறித்து தெரிவித்திருந்த முதலமைச்சர் ஸ்டாலின்,

“ எத்தனை எத்தனை தடைகள் நம் தமிழினத்துக்கு? அத்தனையையும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக எதிர்த்துப் போராடி, அறிவியல் துணைக்கொண்டு நம் இனத்தின் தொன்மையை நிறுவி வருகிறோம்! இருந்தும் ஏற்க மறுக்கின்றன சில மனங்கள். திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை! நாளை மதுரை வீரகனூரில், @dmk_studentwing நடத்தவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாகக் கூடி ஒன்றிய அரசுக்கு நமது தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்துவோம்! அவர்களைத் திருத்துவோம்! “ என்று பதிவிட்டிருந்தார்..

மேலும், இதுகுறித்து பேசியிருந்த எம்.பி சு. வெங்கடேசன், “கோமியம் குடித்தால் கோவிட் போய்விடும் என்று சொன்ன நீ, எங்களிடம் வந்து கூடுதல் அறிவியல் ஆதாரம் கேட்க நியாயம் வேண்டாமா? யாரிடம் வந்து யார் கேட்பது.. பண்டைய இந்தியாவில் பிளாஸ்டிக் சர்ஜரி இருந்தது.. அதன் மூலமாகவே கணேசனுக்கு யானை தலையை பொருத்த முடிந்தது என்று பேசியவர் பிரதமர் மோடி.. அவரின் அமைச்சரவையில் உள்ள ஒருவர், தமிழ்நாட்டிற்கு வந்து அறிவியல் ஆதாரம் வேண்டும் என்று கேட்கிறார்." என்று தெரிவித்து கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.

இந்தநிலையில், இந்த கீழடி அகழ்வாய்வை மேற்கொண்ட அமர்நாத் ராமகிருஷ்னன் நொய்டாவுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டிருப்பது பெரும் விவாதமாக மாறியிருக்கிறது. தேசிய தொல்லியல் மற்றும் நினைவுச் சின்னங்கள் அமைப்பின் இயக்குநராக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணன் நொய்டாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது. அமர்நாத் ராமகிருஷ்ணன் தாக்கல் செய்த கீழடி அறிக்கையை மத்திய அரசு திருத்தம் செய்யக் கோரியிருந்தது. ஆனால், இந்த அறிக்கை அறிவியல் பூர்வமானது திருத்தம் செய்ய முடியாது என்று அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.