மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று காலை வழக்கம் போல் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சியம்மன் கோவில் வளாகத்தில் புத்தகம், அலங்கார பொருட்கள் கடை உட்பட பல்வேறு கடைகள் அமைந்துள்ளன. இந்நிலையில் அம்மன் சன்னதி நுழைவு வாயில் பகுதியில் அமைந்துள்ள சில கடைகளில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
உடனடியாக தல்லாக்குளம், பெரியார் நிலையங்களில் இருந்து ஐந்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகளில் வந்த நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.இதையடுத்து தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.தீ விபத்து நிகழ்ந்த வாசலை தவிர்த்து பிற வாசல் வழியாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.