தமிழ்நாடு

மானாமதுரை நகராட்சி சேர்மன் பதவி ஒதுக்கீடு: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதிய உத்தரவு

kaleelrahman

2022 வருடம் தொடங்கிவிட்டது, தொழில்நுட்பம் மிகப்பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளது. மக்கள் அனைவரிடமும் ஆதார் வழங்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு சமுதாய ரீதியாக எடுக்கப்பட்டு அதன்படி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியைச் சேர்ந்த காமராஜ் (எ) சின்னதுரை, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், 'சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் 3 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். தற்போது மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திலிருந்து நகராட்சியாக மாற்றப்பட்டது.

மானாமதுரை நகராட்சியில் 32 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 45 வருடங்களாக மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் பட்டியலின மக்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது தற்போது மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து நகராட்சியாக மாற்றப்பட்டுள்ளது. இதில் பட்டியலின மக்கள் 5,760 நபர்கள் மட்டுமே உள்ளனர்.

ஆனால், தற்போது மானாமதுரை நகராட்சி சேர்மன் பதவி, பட்டியல் இன மக்களுக்கு ஒதுக்கப்பட்டதாக தமிழக அரசு அரசாணை 11-ன் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக ஒதுக்கப்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்கதல்ல எனவே இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

எனவே, மானாமதுரை நகராட்சி சேர்மன் பதவியை பட்டியலின மக்களுக்கு ஒதுக்கி நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறை சார்பாக 2022 ஜனவரி 17-ஆம் தேதி தமிழக அரசால் வெளியிடப்பட்ட அரசாணை எண் 11-யை ரத்து செய்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.' என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, ஸ்ரீமதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக தேர்தல் ஆணையம் தரப்பில், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அப்பகுதியில் அதிக மக்கள் தொகை கொண்ட சமுதாயத்திற்கு விதிகளின்படி இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், தற்போது 2022 வருடம் தொடங்கிவிட்டது, தொழில்நுட்பம் மிகப்பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளது. மக்கள் அனைவரிடமும் ஆதார் வழங்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு சமுதாய ரீதியாக எடுக்கப்பட்டு அதன்படி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கருத்து தெரிவித்த நீதிபதிகள் வழக்கு குறித்து தமிழ்நாடு தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.