தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் வேளையில், தேமுதிக தனது கூட்டணி நிலைப்பாட்டை அறிவிப்பதில் காலம் தாழ்த்துவதாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், கடந்த தேர்தல்களின தேமுதிகவின் நகர்வுகள் எப்படியிருந்தன என்பதை காணலாம்.
அதிமுக - பாஜக கூட்டணியில் தேமுதிகவுக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட உள்ளதாக தகவல்கள் கசிந்த நிலையில், இந்த செய்தியை வெளியிட்ட கட்சிக்கு அழிவு காலம் நெருங்கிவிட்டதாக கடுமையாக எதிர்வினையாற்றினார் தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த்.
கடலூரில் வரும் 9ஆம் தேதி நடைபெறும் மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிப்பதாக பிரேமலதா பலமுறை கூறிவரும் நிலையில், கூட்டணி தொடர்பான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இது ஒருபுறமிருக்க வேண்டுமென்றே, கூட்டணி அமைக்க தேமுதிக காலம் தாழ்த்துவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு கூட்டணி இறுதி செய்வதையே அந்த கட்சி வாடிக்கையாக கொண்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டில் தேர்தல் நாளுக்கு ஒரு மாதத்துக்கு முன்புதான் அதிமுகவுடனான கூட்டணியை தேமுதிக உறுதிசெய்தது. 2016இல் மக்கள் நலக் கூட்டணியுடன் ஒன்றரை மாதத்திற்கு முன்புதான் கூட்டணியை இறுதி செய்தார் அக்கட்சி தலைவர் விஜயகாந்த். 2021இல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், கடைசி 20 நாட்களே இருந்தபோதுதான், அமமுகவுடன் கூட்டணியை இறுதி செய்து அறிவித்தது தேமுதிக.
அந்த வகையில், தற்போது நான்கு மாதங்களுக்கு முன்பே, அதாவது ஜனவரியில் கூட்டணி முடிவை அறிவிப்போம் என பிரேமலதா விஜயகாந்த் கூறியிருப்பது, தேமுதிக வரலாற்றில் ஒரு வியக்கத்தக்க முன்னேற்றமே தவிர காலம் தாழ்த்துவது அல்ல என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால், கட்சியின் அடுத்த பத்தாண்டுகால எதிர்காலத்தையும் இருப்பையும் உறுதி செய்ய, எவ்வித அவசரமுமின்றி திமுக, அதிமுக, தவெக என அனைத்து வாய்ப்புகளையும் திறந்தே வைத்து பிரேமலதா நிதானமாக காய் நகர்த்துவதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.