தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் தேர்தல் பரப்புரைகள் வேகமெடுத்திருக்கின்றன. வாக்குகளுக்குப் பணமோ அல்லது பரிசு பொருட்களோ வழங்கப்படுவதைத் தடுக்கும் நோக்கில், தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த, ஏப்ரல் 7-ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், ’இதுவரை தமிழகத்தில், 462 கோடி ரூபாய் மதிப்பிலான மற்றும் மதுபானம், போதைப்பொருட்கள் கைபற்றப்பட்டிருக்கின்றன’ எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில்தான், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு 8 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இல்லத்தரசி கூப்பன் வழங்கப்படும் என திமுக சார்பில் தேர்தல் வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டிருந்தது. அதேவேளையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இல்லத்தரசி மாதிரிக் கூப்பன்களை வாக்குகளை பெறும் நோக்கில் தற்போதிலிருந்தே திமுக கொடுத்து வருகிறது என பல்வேறு கட்சிகளைச் சார்ந்தவர்களும் குற்றஞ்சாட்டி வந்தனர்.
இந்நிலையில், திருச்சி மண்ணச்சநல்லூர் தொகுதி வேட்பாளர் கதிரவனின் ஆதரவாளர்கள் வீடு வீடாகச் சென்று மாதிரிக் கூப்பன் வழங்கியதாக கூறப்படுகிறது. அப்போது, சிந்துஜா என்ற பெண்ணின் வீட்டிற்கு கூப்பன் கொடுக்கப்படாத சூழலில், அவர் சம்பத்தப்பட்ட திமுகவினரை கேள்வி எழுப்பியிருக்கிறார். அப்போது, திமுகவினர் சிந்துஜாவை ஆபாச வார்த்தைகள் மூலம் திட்டியதாகவும், தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால், சிந்துஜா மன உளைச்சலில் இருந்த நிலையில், இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையடுத்து, சிந்துஜாவின் இறப்புக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி வரும், அவரின் உறவினர்கள் திருச்சி - லால்குடி சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அப்பதிவில், ”தமிழகம் முழுவதும், தேர்தல் நடைமுறைகளுக்கு விரோதமாக, கூப்பன் வழங்கி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் திமுகவினர், தனக்கு கூப்பன் வழங்கப்படவில்லை என்று கேட்ட சகோதரி சிந்துஜா மீது, தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.
தொடர்ந்து, தவெக தலைவர் விஜயின் கண்டனப் பதிவில், ”சாதாரண மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கான தேர்தல் என்ன சதுரங்க வேட்டையா? உங்கள் அதிகாரப் பசிக்காக அப்பாவிகளை ஏமாற்றிப் பிழைக்க, இதென்ன இரிடியம் விற்பனையா? மக்களை ஏமாற்றும் மண்ணுளிப் பாம்பா அல்லது வாக்காளர்களை ஏமாற்றும் ரைஸ் புல்லிங்கா இந்த எட்டாயிரம் ரூபாய் கூப்பன்?
இன்று இந்த ஜனநாயக விரோத எட்டாயிரம் ரூபாய் கூப்பன் விநியோகம் செய்யும்போது திமுகவினரின் ஆபாச வசவுகளைத் தாங்க இயலாமல், மன உளைச்சலால் திருச்சி மண்ணச்சநல்லூரில் சகோதரி ஒருவர் தன்னுடைய உயிரை மாய்த்துக்கொண்டார் என்கிற செய்தி உங்கள் மனசாட்சியை உலுக்கவில்லையா ஸ்டாலின் சார்?” எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.