தமிழ்நாடு

ஜெ.தீபாவின் கணவர்தான் ஐ.டி அதிகாரியாக நடிக்கச் சொன்னார்: சரணடைந்தவர் குற்றச்சாட்டு

ஜெ.தீபாவின் கணவர்தான் ஐ.டி அதிகாரியாக நடிக்கச் சொன்னார்: சரணடைந்தவர் குற்றச்சாட்டு

Rasus

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் இல்லத்தில் சோதனை நடத்தச் சென்றபோது தப்பியோடிய போலி வருமான வரித்துறை அதிகாரி, காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். ‌‌‌சினி‌‌மாவில் வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறிய ஜெ.தீபாவின் கணவர் மாதவன் தான், தம்மை வருமானவரித்துறை அதிகாரி போல நடிக்கச் சொன்னதாக சரணடைந்த பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா சென்னை தியாகராயர் நகரில் வசித்து வருகிறார். கடந்த சனிக்கிழமை அவரது வீட்டிற்குச் சென்ற நபர் ஒருவர், தம்மை வருமானவரித்துறை அதிகாரி எனக்கூறி சோதனையிட முயன்றுள்ளார். தகவலறிந்து சென்ற காவ‌‌லர்களைக் கண்டு அச்சமடைந்த அந்த நபர், அங்கிருந்து சுவர் ஏறி குதித்துத் தப்பிச் சென்றார்‌.

இதுகுறித்து 4 தனிப்படைகள் மூலம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில்‌‌, விழுப்புரம்‌ மாவட்டத்தை‌ச் சேர்ந்த பிரபாகரன் மாம்பலம் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். இந்நிலையில், சினிமாவில் வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி தம்மை வீட்டிற்கு அழைத்த மாதவன், போலி ஆவணங்களைக் கொடுத்து வருமானவரித்துறை அதிகாரி போல நடிக்கச் சொன்னதாகர் தெரிவித்துள்ளார். காவல்துறையினரைக் கண்டு அச்சமடைந்த நிலையில், மாதவன் தான் தம்மை சுவர் ஏறி குதித்து தப்பியோட‌ச் சொன்னதாகவும் பிரபாக‌ரன் கூறியுள்ளார்.