திருநெல்வேலி நீதிமன்ற வாயில் கொலை PT
தமிழ்நாடு

”தலையை சிதைத்து கொலை.. நின்று வேடிக்கை பார்த்த 35 காவலர்கள்!” - கடுமையாக விமர்சித்த வழக்கறிஞர்கள்!

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் வாயில் அருகே இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கொலை நடந்தபோது அருகிலிருந்த 30-க்கும் மேற்பட்ட காவலர்கள் நின்று வேடிக்கை பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Rishan Vengai

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணைக்கு வந்த ஒருவரை 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று ஓடஓட துரத்தி சரமாரியாக வெட்டியும், தலையை சிதைத்தும் கொடூரமாக படுகொலை செய்தது.

இந்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பான சூழலை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், வெட்டிக்கொலை செய்ய கும்பல் அந்த நபரை துரத்தியபோது காவல்பணியில் இருந்த 30-க்கும் மேற்பட்ட காவலர்கள் வேடிக்கை மட்டுமே பார்த்ததாகவும், சிலர் உதவிக்கு அழைத்தும் வரவில்லை என்றும் குற்றவாளி ஒருவரை துரத்திப்பிடித்த வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

என்ன நடந்தது?

திருநெல்வேலி மாவட்டம், கீழநத்தம் பகுதியைச் சேர்ந்த மாயாண்டி என்ற இளைஞர், வழக்கு விசாரணைக்காக நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். அங்கு 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை சுற்றி வளைத்து ஓடஓடவிரட்டி சரிமாரியாக வெட்டியது.

திருநெல்வேலி நீதிமன்றம்

தன்னை காப்பாற்றிக்கொள்ள தப்பித்து நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே ஓடிய மாயாண்டியை விடாமல் பின் தொடர்ந்து துரத்தி வந்த அந்த கும்பல் நீதிமன்ற வாயில் அருகே, அவரை சரமாரியாக வெட்டியும், அவரது முகத்தை சிதைத்தும் கொடூரமாக தாக்கியது. இதனால், சம்பவ இடத்திலேயே மாயாண்டி உயிரிழந்தார்.

திருநெல்வேலி கொலை சம்பவம்

இந்த சம்பவத்தின்போது காவல்துறையினர் 30க்கும் மேற்பட்டோர் பணியில் இருந்ததாகவும், ஆனால் குற்றத்தை தடுக்கவும், குற்றவாளிகளை பிடிக்கவும் காவலர்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றும் அங்கிருந்த வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டை வைத்துள்ளனர்.

நீதிமன்றத்திலேயே பாதுகாப்பு இல்லை என்றால் சமூகத்தில் எப்படி இருக்கும்?

கொலைக்குற்றத்தை தடுக்காமல் வேடிக்கை பார்த்ததாக கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்த வழக்கறிஞர் ஒருவர், திருநெல்வேலி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் மெயின் கேட் முன்னாடி ஒருத்தர நாலைந்து நபர்கள் சேர்ந்து வெட்டிக்கொல்றாங்க, 10 அடி இடைவெளில 30-35 காவலர்கள் நின்னு வேடிக்கை பார்க்குறாங்க. போலீஸாலயே வரமுடியலனா சாதாரண பொதுமக்கள் எப்படி உதவிக்கு வருவாங்க.

கொலை பண்ண வந்த குற்றாவளிகளில் ஒரு நபரை 2 வழக்கறிஞர்கள் துரத்தி பிடிக்கிறோம், அவங்க தப்பிச்சு போன காரை தடுத்து நிறுத்தி போலீஸ உதவிக்கு கூப்பிடுறோம் ஒருத்தர் கூட வரவில்லை. ஒருவேளை எங்களுக்கும் வெட்டுவிழுந்தா யார் பாதுகாப்பு?

பட்டபகல்ல நீதிமன்றத்தின் முன்னாடி ஐந்து பேர் கொண்ட கும்பல் தைரியமா வெட்டிக்கொலை பண்ணிட்டு போறான், இந்த சமுதாயம் என்ன பண்ணிடும், இந்த காவல்துறை என்ன பண்ணுடும், இந்த சாதாரண மக்கள் என்ன பண்ணிடுவாங்கன்ற மிகப்பெரிய கேள்வியை கேட்டுட்டு போறான்.

நீதிமன்றத்துலேயே பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்ல, இப்படி இருந்தா எப்படி அவனுக்கு வீட்டுல பாதுகாப்பு இருக்கும். இந்த காவல்துறை என்ன பண்ணிட்டு இருக்கு? என சரமாரியான கேள்விகளை முன்வைத்தார்.

மற்றொரு வழக்கறிஞர் பேசுகையில், நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள், அமர்வு நீதிபதிகள், காவல்துறை அதிகாரிகள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் என தினமும் பல்லாயிரம் மக்கள் வந்துசெல்லக்கூடிய இடத்தில் காவல் அதிகாரிகள் முன்னிலையிலேயே படுகொலை நடந்துள்ளது. இரண்டு வழக்கறிஞர்கள் எந்தவிதமான தற்காப்பு ஆயுதமும் இல்லாமல் ஓடிப்போய் குற்றவாளிகளை பிடிக்கிறாங்க, எல்லா ஆயுதமும் இருந்தும் காவல்துறையினர் ஒன்றும் செய்யவில்லை.

காவலர்கள் சத்தமிட்டிருந்தால் கூட கொலையை தடுத்து நிறுத்தியிருக்க முடியும். ஆனால் காவலர்கள் கொலையை பார்த்து தப்பிக்க அவர்கள் ஓடுகின்றனர்” என கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார்.