தமிழ்நாடு

தீபாவளி நேரத்தில் போலி பில் போட்டு விற்பனை?.. தனியார் துணிக்கடையில் திடீர் ஐடி ரெய்டு!

webteam

முசிறி உள்பட 3 இடங்களில் மேக்னா சில்க்ஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

திருச்சி மாவட்டம் முசிறி உட்பட 3 இடங்களில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஜவுளி நிறுவனங்கள் மற்றும் கிளைகள், வீடு, அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று (நவ. 2) காலை முதல் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்தவர் குமார் (52). இவர் மேக்னா டெக்ஸ்டைல்ஸ் என்ற பெயரில் துறையூர் முசிறி, பரமத்தி, வேலூர் ஆகிய இடங்களில் ஜவுளி கடைகள் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், இந்தக் கடைகளில் தீபாவளி பண்டிகையின் போது ஜவுளி விற்பனையில் வாடிக்கையாளர்களுக்கு போலி பில் கொடுத்து வருமான வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் கோவை வருமான வரித்துறை உதவி இயக்குநர் பாலாஜி தலைமையில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இன்று காலை முதல் அக்கடைகள் அனைத்திலும் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடைகளில் மட்டுமன்றி, உரிமையாளர் வீடு மற்றும் அலுவலகம் ஆகிய இடங்களில் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். சோதனை முடிவில் எந்த அளவிற்கு வருமான வரி ஏய்ப்பு நடந்துள்ளது என தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.