தமிழ்நாடு

“பெயரே ‘முன்னேறிய வகுப்பினர்’; பிறகு ஏன் இடஒதுக்கீடு” - சீமான் கேள்வி

“பெயரே ‘முன்னேறிய வகுப்பினர்’; பிறகு ஏன் இடஒதுக்கீடு” - சீமான் கேள்வி

Rasus

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்குவதற்கு அதிமுக ஆதரவு தெரிவிக்கும் நிலையில், திமுக அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கல்வி, வேலைவாய்ப்பில் பொருளாதாரத்தில் நலிந்த முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு சட்டம் இயற்றியுள்ளது. அது குறித்து விவாதிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று மாலை 5.‌30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், ‌இ‌டஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலை அறிமுகப்படுத்த முடியாது எனத் தெரிவித்தார். 10 சதவிகித இடஒதுக்கீட்டில் இருந்து தமிழகத்திற்கு விதிவிலக்கு அளிக்கும் ஒரு திருத்த மசோதாவை தாக்கல் செய்து தமிழ்நாட்டில் உள்ள ‌69 சதகிவித இ‌டஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு மத்திய அரசு பணியில் 10 சதவிகித இ‌ட ஒதுக்கீடு ‌என்று கொண்டுவரப்பட்ட மத்திய அரசின் ஆணையை‌ ஏற்கெனவே உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளதை ஸ்டாலின் சுட்டிக் காட்டி பேசினார். பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இடஒதுக்கீட்டிற்கு எதிராக தொடுக்கப்ப‌ட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில் மருத்துவக் கல்லூரியில் இடஒதுக்கீடு வழங்கும் புதிய முயற்சியை தடுத்து நிறுத்தவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அதேநேரம், பொருளாதாரத்தில் நலிவுற்ற பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு மூலம் தமிழகம் கூடுதலாக ஆயிரம் மருத்துவப் பட்டப்படிப்பு இடங்களை பெற வாய்ப்பு உள்ளதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். இந்திய மருத்துவக் குழுமத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி மாநில அரசு விண்ணப்பித்தால் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான 150 இடங்கள் போக, தமிழக அரசின் ஒதுக்கீட்டிற்கு கூடுதலாக 850 இடங்கள் கிடைக்கும் என்று அவர் கூறினார். மொத்தமாக மாநில ஒதுக்கீட்டில் வரக்கூடிய 3 ஆயிரத்து 825 இடங்களில், 383 இடங்கள் பொருளாதாரத்தில் நலிவுற்ற இடஒதுக்கீடு பெறாத பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பின், தற்போது உள்ள நடைமுறையின்படி, 586 இடங்கள் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு கூடுதலாக கிடைக்கும் என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இதேபோல இக்கூட்டத்தில் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, 69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு பாதிப்பு ஏற்படாமல் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை தமிழக காங்கிரஸ் ஆதரிக்கிறது என்றார்.

அதேசமயம் 10 சதவீத இடஒதுக்கீட்டிற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பெயரே ‘முன்னேறிய வகுப்பினர்’ அவர்களுக்கு எதற்கு இடஒதுக்கீடு என்று கேள்வி எழுப்பினார்.