தமிழ்நாடு

`தீபத்திருவிழா அதுவும் இப்படியா...?’- முன்விரோதம், மதுபோதை காரணமாக ஏற்பட்ட அசம்பாவிதங்கள்

webteam

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே அம்மன் கோவிலில் சாமியாடிய பெண் மீது கொதிக்கும் எண்ணெய் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. சாமி ஆடுவதில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக கொதிக்கும் எண்ணெய் ஊற்றியதாக சுசீந்திரம் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல நெல்லையிலும் கார்த்திகை தீபத்தையொட்டி ஏற்றபட்ட சொக்கப்பனையில் ஒருவர் மதுபோதையில் விழுந்திருக்கிறார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பணிக்கன் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பால்தங்கம் (48) என்ற பெண். இவர் அப்பகுதியில் உள்ள அவர்களது குடும்ப கோவிலான பிரம்ம சக்தி அம்மன் கோவிலில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக கொடைவிழா நடைபெறும் போது சாமியாடி அருள் வாக்கு சொல்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த விஜயன் (35) என்பவர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் எல்லாம் கொடை விழா நடைபெறும் போது சாமியாடுவதால், இக்கோவிலிலும் கடந்த ஆண்டு சாமியாடியுள்ளார் . இதனால் கடந்த ஆண்டு விஜயனை இக்கோவிலில் சாமியாடக்கூடாது என்று கோவில் நிர்வாகிகள் கண்டித்துள்ளனர்.

இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக விஜயன் பலமுறை பால்தங்கத்திடம் “நீ அடுத்த ஆண்டு சாமியாடுவதற்கு உயிருடன் இருக்க மாட்டாய்" என்று எச்சரித்து சென்றுள்ளார். இந்நிலையில் இன்று கோவிலில் இந்த ஆண்டிற்கான கொடை விழா இன்று நடைபெறும் போது பால்தங்கம் சாமியாடியுள்ளார். அப்போது கோவிலுக்கு சென்ற விஜயன், தனக்கும் அருள் இறங்கியது போல் சாமியாடிய நிலையில் கோவிலில் பலகாரம் சுடுவதற்காக நன்கு காய்ந்து கொதி நிலையில் இருந்த எண்ணெயை பால்தங்கத்தின் மீது ஊற்றியுள்ளார். இதில் உடல் முழுவதும் கொப்புளங்கள் ஏற்பட்டதோடு, மார்பு, கை, கால் உட்பட உடல் உறுப்புகள் பலத்த காயமடைத்துள்ளது.

உடனடியாக அப்பகுதியினர் பால் தங்கத்தை மீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிட்சைக்காக அவசர பிரிவில் சேர்த்துள்ளனர். 35 சதவீத தீ காயத்துடன் ஆபத்தான நிலையில் பால்தங்கம் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சுசீந்திரம் போலீசார் விஜயனை, கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை  சமாதானபுரம் அம்பேத்கர் காலனியில் அமைந்துள்ள காளியம்மன் கோவிலில் கார்த்திகை திருநாளை முன்னிட்டு சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அப்போது அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் மது போதையில் மளமளவென தீப்பற்றி எரிந்து கொண்டிந்த சொக்கப்பனைக்குள் விழுந்துள்ளார். இதில்  படுகாயமடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வு குறித்து பாளையங்கோட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார்த்திகை தீபத்திருநாளின் கொண்டாட்ட வேளையில், மக்கள் இதுபோன்று முன்பகை - மதுபோதை காரணங்களால் தீக்காயங்களுக்கு உள்ளாவது மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.