தமிழ்நாடு

கோவையில் மதுபானம் கலந்த ஐஸ்கிரீம்? கடைக்கு சீல்வைக்க அமைச்சர் உத்தரவு

Veeramani

(கோப்பு புகைப்படம்)

கோவையில் மதுபானம் கலந்த ஐஸ்கிரீம் விற்பனை செய்யும் கடைக்கு சீல் வைக்க தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார். அதன்பேரில் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

கோயமுத்தூர் பி.என்.பாளையம் அவினாசி சாலையில் உள்ள “ரோலிங் டஃப் கபே” எனும் ஐஸ்கிரீம் கடையில் ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை செய்யப்படுவதாக கடந்த 20ஆம் தேதி புகார் பெறப்பட்டது. இதனை தொடர்ந்து கோவை மாவட்ட நியமன அலுவலர் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழு இந்த கடையில் ஆய்வு நடத்தியது.

ந்த ஆய்வின்போது உணவு தயார் செய்யும் இடத்தில் இரண்டு மது பாட்டில்கள் கண்டறியப்பட்டது. காலாவதியான உணவு பொருட்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்து அளிக்கப்பட்டது. மேலும், ஆய்வின்போது உணவு கையாளுபவர்கள் உரிய மருத்துவ தகுதிச் சான்று பெறவில்லை, உணவு தயார் செய்யும் இடத்தில் ஈக்கள் அதிகம் காணப்பட்டதாகவும், பூச்சி தொற்று நீக்கம் செய்து அதற்கான பதிவேடுகள் பராமரிக்கப்படவில்லை எனவும், தண்ணீரை முறையாக ஆய்வு செய்து அறிக்கை பெறப்படவில்லை எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உணவு கையாளுபவர்கள் முகக்கவசம், கையுறை, தலைஉறை அணியவில்லை எனவும், உணவு பாதுகாப்பு துறையின் கீழ் பெறப்பட்ட உரிமம் பிரதான இடத்தில் காட்சிப்படுத்தப் படவில்லை என்பன போன்ற குறைபாடுகள் கண்டறியப்பட்டதால் அந்த கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்பட்டது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது