தமிழ்நாடு

அவலம்! பயன்பாட்டில் இருந்த அடிபம்பை மூடி சிமெண்ட் சாலை போட்ட கிருஷ்ணகிரி ஒப்பந்ததாரர்!

webteam

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முல்லை நகர் கிராமத்தில் பயன்பாட்டில் இருந்த அடிபம்பை மூடிவிட்டு சிமெண்ட் சாலை போடப்பட்டதால் கிராம மக்கள் அதிர்ச்சியுற்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே புளியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட முல்லை நகர் கிராமத்தில் சின்ன திருப்பதி கோவில் முதல் குருசாமி கொட்டாய் வரையில் கடந்த ஒரு மாதங்களுக்கு முன்னர் சுமார் 6 லட்சம் மதிப்பில் ஊராட்சி நிர்வாகம் மூலம் புதியதாக சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது. என்.ஆர்.ஜி.எஸ் நிதியிலிருந்து அமைக்கப்பட்ட இந்த சிமெண்ட் சாலை அமைக்கும் பணியின்போது சாலையோரத்தில் பயன்பாட்டில் இருந்த கைவிசை பம்புடன் கூடிய ஆழ்துளை கிணற்றையும் சேர்த்து சாலை அமைக்கப்பட்டது.

இதன் காரணமாக அப்பகுதி மக்கள் தண்ணீர் பெறப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களுக்கு முன்னர் வரை கைபம்பு பயன்படுத்தி வந்த நிலையில், கைபம்பின் செயின் அறுபட்டதால் தற்காலிகமாக பயன்படுத்தாமல் இருந்து வந்தனர். ஊராட்சி செயலாளர் கைபம்பை சரிசெய்வதற்குள், சிமெண்ட் சாலை பணியின் ஒப்பந்ததாரர் கைபம்பை சுற்றி சிமெண்ட் சாலை அமைத்துவிட்டு சென்றுவிட்டார் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதனால் சிமெண்ட் சாலைக்கு மேல் உயரத்தை ஏற்றி கைபம்பை அமைத்துக்கொடுக்க வேண்டுமென கோரிக்கை வைக்கின்றனர்.

இதுகுறித்து பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கட்ராம கணேஷ் அவர்களிடம் கேட்டபோது, கைபம்பை மூடி சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது தவறு தான் என்றும் உடனடியாக சிமெண்ட் சாலையை உடைத்து, கைபம்பை செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார்.