தமிழ்நாடு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: முதல் பரிசு வென்றவர் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது உறுதி

webteam

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் ஆள்மாறாட்டம் நடந்ததாக புகார் எழுந்ததின் பேரில், வருவாய்த் துறை நடத்திய விசாரணையில் ஆள்மாறட்டம் நடந்தது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கடந்த 16-ம் தேதி நடைபெற்ற உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 12 காளைகளை அடக்கி முதல் பரிசு வென்ற கண்ணன் ஆள்மாறாட்ட மோசடியில் ஈடுபட்டதாக, 9 காளைகளை அடக்கி இராண்டாம் பரிசு வென்ற கருப்பண்ணன் என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார்.

அந்த புகாரில், முதல் சுற்றில் களமிறங்கிய 33-வது பனியன் எண் கொண்ட ஹரிகிருஷ்ணன் என்பவர் 3 காளைகளை பிடித்த நிலையில் அவருக்கு காயம் ஏற்பட்டு களத்தை விட்டு வெளியேறியதாகவும், அவர் அணிந்திருந்த 33-வது எண் கொண்ட பனியனை முன்பதிவு செய்யாத கண்ணன் என்பவர் அணிந்து தொடர்ந்து 9 காளைகளை பிடித்து ஆள்மாறாட்டம் செய்து முறைக்கேட்டில் ஈடுபட்டதாகவும், ஆகையால் இது குறித்து முறைப்படி விசாரணை நடத்தி முதல் 9 காளைகளை அடக்கிய தனக்கு பரிசை வழங்கவேண்டும் எனக் குறிப்பிட்டு இருந்தார்.

இது குறித்து 33-ஆம் எண்ணில் பதிவுசெய்த ஹரிகிருஷ்ணனின் கேட்டபோது, சகவீரர்கள் தாக்கியதால் களம் இறங்கவில்லை எனவும், வெளியேறியபோது கண்ணனிடன் டிஷர்ட்டை கொடுத்ததாகவும் தெரிவித்தார். இதனையடுத்து நடத்தப்பட்ட கோட்டாட்சியர் உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் கண்ணன் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது உறுதியாகியுள்ளது. ஆள்மாறாட்டம் உறுதியான நிலையில் முதல் பரிசை யாருக்கு வழங்குவது என்பதை ஜல்லிக்கட்டு விழாக் குழு முடிவு செய்யும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

( ஹரி கிருஷ்ணன்)                                                  ( ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட கண்ணன்)

முன்னதாக, புதிய தலைமுறை நடத்திய கள ஆய்வில், ஹரிகிருஷ்ணன், தாக்கப்பட்டதால் வெளியேறியபோது வாடிவாசலில் நின்ற கண்ணன் என்பவர் டிஷர்ட்டை வாங்கிக்கொண்டதாகவும், அவர் முன்பதிவு எதுவும் செய்யாமலும், மாடுபிடி வீரர்களுக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையையும் செய்துகொள்ளாமலும் நேரடியாக களத்தில் இறங்கியது தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.