தமிழ்நாடு

ஆலங்குடி: வீடுகட்டத் தோண்டிய குழியில் கண்டறியப்பட்ட அப்பர் பெருமாள் சிலைகள்

kaleelrahman

குரு ஸ்தலமான ஆலங்குடி பகுதியில் வீடு கட்டுவதற்காக தோண்டிய குழியில் சிலைகள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், வட்டாட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே உள்ள குரு ஸ்தலமான ஆலங்குடி பகுதியில் உள்ள மண்டித் தெருவில் வசிக்கும் முத்து என்பவர் அவரது இடத்தில் வீடு கட்டுவதற்காக ஜேசிபி எந்திரம் மூலமாக குழி பறித்துள்ளார்.

இந்த நிலையில், தோண்டப்பட்ட குழிக்குள் சுமார் 3 அடி உயரம் கொண்ட பெருமாள் சிலை, 1 அடி உயரமுள்ள அப்பர் சிலை மற்றும் சிறிய வகை சிலைகள் அடங்கிய உலோக கலையமும் கிடைத்துள்ளன.

இதுகுறித்து ஆலங்குடி ஊராட்சி மன்ற தலைவரிடம் முத்து தகவல் தெரிவித்துள்ளார். அதனை அடுத்து ஊராட்சி மன்றத் தலைவர் வலங்கைமான் வட்டாட்சியரிடம் தகவல் தெரிவித்ததன் பேரில், சம்பவ இடத்திற்கு நேரில் வந்த வலங்கைமான் வட்டாட்சியர் ஆய்வு செய்தார்.

இதையடுத்து சிலைகளை கைப்பற்றி வலங்கைமான் வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து வீடு கட்டும் பணியை நிறுத்தி வைக்கும்படி வட்டாட்சியர் கூறியுள்ள நிலையில், இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்..