சத்தீஸ்வரன் - அஜித்குமார் web
தமிழ்நாடு

அஜித் மரணம் | காவலருக்கு ரவுடிகளுடன் தொடர்பு? ’எங்களுக்கு பாதுகாப்பில்லை!’ வீடியோ எடுத்தவர் அச்சம்!

அஜித்குமார் சித்திரவதை செய்யப்பட்டதை வீடியோ எடுத்த தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல் இருப்பதாக டிஜிபி அலுவலகத்திற்கு வீடியோ எடுத்த நபர் பரபரப்பு புகார் ஒன்றை அனுப்பியுள்ளார்..அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது என்ன பார்க்கலாம்!

விமல் ராஜ்

சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தைச் சேர்ந்த கோயில் காவலாளி அஜித்குமார் மீது விசாரணை என்ற பெயரில் தனிப்படை போலீசார் நடத்திய தாக்குதலில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.. இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்க தொடக்கிய நிலையில் போலீசார் அஜித்குமார் மீது தாக்குதல் நடத்தவில்லை என மறுத்து வந்தனர்.

இந்த நிலையில், அஜித்குமார் பணிபுரிந்த அதே கோவிலில் ஊழியராக பணியாற்றி வரும் சத்தீஸ்வரன் என்ற ஊழியர், அஜித்குமாரை தனிப்படை போலீசார் கொடூரமாக தாக்கியதை தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார்.

இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வீடியோ, நீதிமன்றத்தில் முக்கிய ஆவணமாகவும் சமர்ப்பிக்கப்பட்டது.

திருப்புவனம் அஜித் குமார்

பின்னர், இந்த வழக்கு சூடுபிடிக்க தொடங்கிய நிலையில் தனிப்படை போலீசார் ஐந்து பேரையும் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது 5 காவலர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள காவலர்களில் ராஜா என்ற தனிப்படை காவலர் சரித்திர பதிவேடு குற்றவாளிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், அவர்கள் மூலம் தனது குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் வீடியோ எடுத்த சத்தீஸ்வரன் டிஜிபி அலுவலகத்திற்கு பரபரப்பு புகார் ஒன்றை அனுப்பியுள்ளார்.

எங்களுக்கு பாதுகாப்பு இல்லை..

அந்த புகார் மனுவில், "இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தனிப்படை காவலர் ராஜாவுக்கு பல ரவுடிகளுடன் தொடர்பு உள்ளது. அஜித்குமார் சித்ரவதை செய்யப்பட்ட போது அதனை வீடியோ எடுத்து நீதிமன்றத்தில் வழங்கினேன். இதனால் எனக்கும் என்னுடைய குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல் இருக்கிறது.

தற்போது நான் திருப்புவனம் பகுதியில் வசித்து வருகிறேன்.. இங்குள்ள காவல்துறையினர் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. எனவே, திருப்புவனத்தைச் சாராத மாவட்டத்தைச் சேர்ந்த ஆயுதமேந்திய போலீசார் 24 மணி நேரமும் என் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்" என அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சத்தீஸ்வரன், "அஜித்குமாரை போலீசார் தாக்கிய உண்மை தகவலை காவல்துறை உயர் அதிகாரிகளிடம் கூறியதற்கு என்னையே தவறாக சொன்னார்கள். மனிதாபிமானம் இல்லாமல் என்னை குற்றம் சாட்டுகின்றனர். கடைசிவரை என்னை அஜீத் மாமா மாமா என அழைத்தார். நான் தைரியமாக வெளிவந்து உண்மையை கூறியதும் மற்ற சாட்சிகளும் தைரியமாக வெளியே வந்து உண்மையை கூறுகின்றனர். எனக்கு பாதுகாப்பு வேண்டும்” என கூறியுள்ளார்.