நடிகர் ரஜினிகாந்தின் குடும்பத்தினர் நடத்தும் ஆஸ்ரம் பள்ளியின் நற்பெயருக்கு நில உரிமையாளர் களங்கம் விளைவித்து விட்டதால் 6 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிடுமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஐஸ்வர்யா தனுஷ் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
ஸ்ரீராகவேந்திரா கல்விச் சங்கத்தின் செயலாளர் ஐஸ்வர்யா தனுஷ் தாக்கல் செய்துள்ள மனுவில், 2005-ஆம் ஆண்டு கிண்டியில் ஆஸ்ரம் பள்ளி தொடங்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். அதற்காக வெங்கடேஸ்வரலு என்பவருக்கு சொந்தமான 33 ஆயிரத்து 86 சதுர அடி பரப்பளவு இடத்தை 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மாத வாடகை அடிப்படையில் குத்தகைக்கு எடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
வாடகை முற்றிலும் செலுத்தப்பட்டுவிட்ட நிலையில், பாக்கியிருப்பதாகக் கூறி கடந்த 15-ஆம் தேதி வெங்கடேஷ்வரலு, பள்ளியின் நுழைவாயிலைப் பூட்டியதால் தங்களது கல்வி நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிட்டதாக ஐஸ்வர்யா தனுஷ் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். அதனால், அத்துமீறி பள்ளி வளாகத்தில் நுழைந்ததற்காக ஒரு கோடி ரூபாயும், பள்ளியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததற்கு 5 கோடி ரூபாயும் என மொத்தம் ஆறு கோடி ரூபாய் தர வெங்கடேஷ்வரலுவுக்கு உத்தரவிடுமாறு ஐஸ்வர்யா தனுஷ் கோரியுள்ளார். இந்த மனு மீது நாளை விசாரணை நடைபெறும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.