தமிழ்நாடு

மாறன் சகோதரர்கள் மீதான பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கு ஒத்திவைப்பு

webteam

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்திய புகாரில் மாறன் சகோதரர்கள் மீதான வழக்கு வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

பிஎஸ்என்எல் இணைப்பு முறைகேடு  வழக்கில் கடந்த 6ஆம் தேதி கலாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரர் தயாநிதி மாறன் சிபிஐ நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி குற்றப்பத்திரிக்கை நகலை பெற்று கொண்டனர். இந்த நிலையில் இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த வழக்கு வரும் ஆகஸ்ட் 8ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.  

மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக பதவி வகித்த தயாநிதி மாறன், தனது வீடுகளில் சட்ட விரோதமாக அதிவேக உயர் இணைப்புகள் கொண்ட தொலைபேசி இணைப்பகத்தை நடத்தியதாக சிபிஐ வழக்கு தொடர்ந்தது. இதன் மூலம் அரசுக்கு ஒரு கோடியே 78 லட்ச ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிபிஐயின் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக தயாநிதி மாறன், கலாநிதி மாறன், சென்னை பிஎஸ்என்எல் பொதுமேலாளராக இருந்த கே.பிரம்மநாதன், முன்னாள் துணைப் பொதுமேலாளர் எம்.பி.வேலுச்சாமி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.