தமிழ்நாடு

செய்வதறியாத ஏர்செல் வாடிக்கையாளர்கள் ; கண்டுக்கொள்ளாத ஏர்செல் நிறுவனம் !

செய்வதறியாத ஏர்செல் வாடிக்கையாளர்கள் ; கண்டுக்கொள்ளாத ஏர்செல் நிறுவனம் !

இந்தியா முழுக்க ஏர்செல் நெட்வொர்க் முடங்கிப் போயுள்ளது. ஏர்செல் நிறுவனத்தை வாங்குவதாக சொன்ன நிறுவனங்கள் அனைத்தும் கைவிரித்தன. மிக முக்கியமாக நிதி தறுவதாக உறுதியளித்திருந்த மேக்சிஸ் நிறுவனம் கம்பியை நீட்டிவிட்டது.
ஒரு காலாண்டுக்கே 5 கோடி ரூபாய் மட்டும் சம்பாதித்து தரும் நிறுவனத்தில் யார் முதலீடு செய்வார்கள் என கேள்வி கேட்கிறார்கள் முதலீட்டாளார்கள். இது ஒருபக்கம் இருக்க, அப்பாவி வாடிக்கையாளார்கள் இது எதையும் அறியாமல் தவித்து வருகின்றனர்.

கோயம்புத்தூரில் நேற்று ஏர்செல் அலுவலகத்தை முற்றுகையிட்ட வாடிக்கையாளார்கள் எந்த பதிலும் கிடைக்காமல் அதிருப்தி அடைந்தனர். ரீசார்ஜ் செய்த பணத்தை சிக்னல் இல்லாமல் எப்படி பேசுவது என சிலர் கொதிக்க, நெட் பேங்கிங், கேஸ் இணைப்பு, முக்கிய வியாபாரங்கள் என அனைத்துக்கும் ஏர்செல்லையே பயன்படுத்துவதால், எந்த வேலையும் செய்ய முடியாமல் தவிப்பதாக இன்னும் பலர் கொதிக்கின்றனர். இதனிடையே வேறு நிறுவனத்துக்கும் மாற முடியாததால் அவர்களின் கோபம் அதிகரித்துள்ளது.

சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள ஏர்செல் அலுவலகத்தை முற்றுகையிட்ட வாடிக்கையாளர்கள் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து அலுவலகத்தை கல்வீசி தாக்கினர். ஊழியர்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் , வாடிக்கையாளர்களை அமைதிப்படுத்தி அனுப்பி வைத்தனர். புதுச்சேரியிலும் வாடிக்கையாளர்கள் ஏர்செல் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

ஆனால் ஏர்செல் நிறுவனமோ இவை எதையும் கண்டுக்கொண்டதாக தெரியவில்லை. தொடர்ந்து வாடிக்கையாளர்கள் நிலையே பரிதாபமாக உள்ளது. மாறவும் முடியாமல், பயன்படுத்தவும் முடியாமல் தவிக்கும் நிலை தொடர்கிறது.