திருச்சியில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், கட்டுப்பாட்டை இழந்து விமான நிலைய சுற்றுச்சுவரை இடித்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை சுமார் ஒன்றரை மணியளவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் துபாய்க்கு புறப்பட்டது. ஓடுதளத்தில் இருந்து மேலே பறக்கும் போது கட்டுப்பாட்டை இழந்த விமானம், திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை அருகே இருந்த வான் போக்குவரத்துக் மின்கட்டுப்பாட்டுக் கோபுரம் மற்றும் சுற்றுச்சுவர் ஆகியவற்றை இடித்துவிட்டு சென்றது. விமானத்தின் சக்கரங்கள் அவற்றின் மேல் மோதின. நல்வாய்ப்பாக விமானத்துக்கு சேதம் ஏதும் ஏற்படவில்லை.
இந்த விபத்தைத் தொடர்ந்து அந்த விமானம் திருச்சியில் தரையிறக்க அனுமதிக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதைடுத்து மும்பை விமான நிலையத்தில் அந்த விமானம் பத்திரமாகத் தரையிறங்கப்பட்டது. பின்னர் பயணிகள் மாற்று விமானம் மூலம் துபாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் தொழில்நுட்பக் கோளாறை சரி செய்ய, அவ் விமானத்தை விமானி மும்பைக்கு திருப்பியதாக திருச்சி விமான நிலைய அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
இதனிடையே விபத்து குறித்து அறிந்த சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திருச்சி விமான நிலையத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் விபத்து நிகழ்ந்த பகுதிகளை பார்வையிட்டு அவர் அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார்.