திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (AXB613) விமானத்தின் சக்கரங்கள் உள்ளே செல்லாததால் விமானத்தை தரையிறக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. மாலை 5.40 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்பட்டது.
புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. அதாவது விமானத்தின் சக்கரம் உள்ளே செல்லாததால் விமானத்தை மீண்டும் தரையிறக்க விமானிகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். விமானத்தின் எரிபொருளைக் குறைக்கும்பொருட்டு விமானம் வான்பரப்பிலேயே சுற்றி வருகிறது.
திருச்சிக்கும் புதுக்கோட்டைக்கும் இடைப்பட்ட இடத்திலேயே விமானம் சுற்றி வருகிறது. விமானத்தில் கிட்டத்தட்ட 141 பயணிகள் இருக்கின்றனர். எரிபொருள் நிறைந்து இருக்கும்போது தரையிறக்கினால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால், எரிபொருளை குறைக்கும்பொருட்டு விமானம் புதுக்கோட்டையில் உள்ள நார்த்தாமலை சுற்றுவட்டாரப் பகுதி வானிலேயே சுற்றி வருகிறது. அன்னவாசல் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் இதுவரை 13 முறை சம்பந்தப்பட்ட விமானம் சுற்றியுள்ளது. பாக்குடி, மலம்பட்டி, ஆவூர், முக்கணாமலைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விமானம் வானில் வட்டமடித்து வருகிறது.
திருச்சி விமான நிலையத்தில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் உள்ள நிலையில், காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 20க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள், மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர். 4 தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் உள்ளன.
மாவட்ட ஆட்சியர் பிரதீப் நம்மிடம் இதுகுறித்து பேசுகையில், வானத்தில் வட்டமடிக்கும் விமானம் 10 நிமிடங்களில் தரையிறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள அனைத்து மருத்துவர்களும் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.