முஸ்தபா, மன்னன் Puthiya thalaimurai
தமிழ்நாடு

ஆட்சியை கவிழ்க்க திட்டம்.. எம்.எல்.ஏக்களுக்கு ரூ.15 கோடி பேரம்? அதிமுக நிர்வாகி அதிரடி கைது!

தவெக ஆட்சியை கவிழ்க்க ரூபாய் 15 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக வெளியான குற்றச்சாட்டு தொடர்பாக அதிமுக நிர்வாகி கைது.

Praveen Joshva L

தவெகவைச் சேர்ந்த ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் இளையராஜா கடந்த ஜூலை மாதம் காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளதாகவும், இதில் அந்த தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க 35 கோடி வரை தருவதாக பேரம் பேசியதாகவும் கூறியிருந்தார்.

இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த வழக்கில் 14 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தற்போதுவரை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

தவெக சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா

இந்த நிலையில், இரு நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மதுரை மத்திய தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா, தவெக சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் முயற்சி செய்து வருகின்றன என்று கூறினார். மேலும், நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது எதிர்த்து வாக்களிக்க எனக்கு ரூ.15 கோடி வரை கொடுப்பதாக பேரம் பேசினர் என்றும், இந்த சதிக்குப் பின்னால் இருப்பவர்கள் யார் என்பது குறித்து போனில் நடந்த உரையாடல் ஆடியோ விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறியிருந்தார்.

சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபாவின் புகாரைத் தொடர்ந்து அதிமுக நிர்வாகி பி.எம்.மன்னனை நேரில் வரவழைத்து மதுரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் காலை 6 மணியிலிருந்து விசாரணை நடத்தினர். சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற விசாரணையின் முடிவில் அதிமுக நிர்வாகி பி.எம்.மன்னனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பேரத்தில் தொடர்புடைய தொலைபேசி உரையாடல் ஆடியோ ஆதாரங்களை காவல்துறையினரிடம் ஒப்படைக்கவும், அதை பொதுவெளியில் வெளியிடவும் முஸ்தபா தயாராகி வருவதாகத் தெரிகிறது. இந்த விசாரணை மற்றும் ஆடியோ விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.