இபிஎஸ், விஜய், அமித்ஷா x page
தமிழ்நாடு

விஜய் வராததால் பாஜக கூட்டணி | “90 தொகுதி+துணை முதல்வர் பதவி” அதிமுக உடன் நடந்தது இதுதான்!

அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகியிருக்கும் நிலையில், அதிமுகவின் முதல் சாய்ஸ் விஜய்தான் என்றும், கூட்டணி பேச்சுவார்த்தையில் தவெக வைத்த டிமாண்ட் குறித்தும் பரபர தகவலை பகிர்ந்திருக்கிறார் ஆடிட்டர் குருமூர்த்தி.

Uvaram P

அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகியிருக்கும் நிலையில், அதிமுகவின் முதல் சாய்ஸ் விஜய்தான் என்றும், கூட்டணி பேச்சுவார்த்தையில் தவெக வைத்த டிமாண்ட் குறித்தும் பரபர தகவலை பகிர்ந்திருக்கிறார் ஆடிட்டர் குருமூர்த்தி. அதிமுக - பாஜக கூட்டணி உருவான பின்னணியையும் அவர் விவரித்துள்ளார். என்ன நடந்தது? அவர் சொன்னது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலுக்கு சரியாக 12 மாதங்கள் கால அவகாசம் இருக்கிறது. இதற்கான பணிகளை அரசியல் கட்சிகள் முன்னெடுத்துள்ளன. ஒரு பக்கம் திமுக கூட்டணி உறுதியாக இருக்க, தனக்கும் திமுகவுக்கும்தான் போட்டி என்று ஆவேசமாக அடித்து ஆடத்தொடங்கி இருக்கிறார் தவெக தலைவர் விஜய். இன்னொரு பக்கம் சீமான் தனித்து நிற்பதாக கூற, எந்த பக்கம் கூட்டணி என்பது குறித்து நீண்ட இழுபறிக்குப் பின்பு பாஜகவோடு கூட்டணி வைத்திருக்கிறது எதிர்க்கட்சியான அதிமுக.

அமித் ஷா, இபிஎஸ்

இந்த நிலையில், கூட்டணி விஷயத்தில் அதிமுகவின் சாய்ஸ் விஜய்தான் என்று கூறி இருக்கிறார் ஆடிட்டர் குருமூர்த்தி. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், இதுதொடர்பாக முக்கிய விஷயங்களை விவரித்துள்ளார். விஜய் கிடைக்காததால்தான் பாஜகவோடு அதிமுக கூட்டணி வைத்துள்ளது. திமுகவை தாக்கும் விஜய் அதிமுகவை தாக்கவில்லை. அவரோடு அதிமுக பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வந்தது. கூட்டணி என்று வந்தால் 90 தொகுதிகள்.. விஜய் துணை முதல்வர் என்று டிமாண்ட் வைக்கப்பட்டது. இது நடந்தால் அதிமுகவில் பல பேருக்கு வேலை இருக்காது. அப்படி ஒன்று நடந்தால் எடப்பாடியின் தலைமைக்கே பங்கம் வந்துவிடும். எடப்பாடி கூட்டத்தை கூட்ட வேண்டும்.. ஆனால் விஜய்க்கு கூட்டம் கூடும்.. இப்படியாக அதிமுகவின் முதல் சாய்ஸ் விஜய்தான். ஆனால், அவர் வர மறுத்ததால்தான், அதிமுக பாஜகவோடு போயிருக்கிறது.

அதற்கேற்றபடி, கூட்டணி என்றால் இப்போதே முடிவெடுங்கள் என்று அமித்ஷா கூறிவிட்டார். இப்படி இருக்க விஜய் கிடைக்காததால், பாஜகவோடு கூட்டணி வைத்துள்ளார்கள் என்று கூட்டணி ரகசியங்களை கூறியிருக்கிறார் குருமூர்த்தி. சில தினங்களுக்கு முன்பு சென்னை வந்த மத்திய உள்துறை அமித்ஷா, குருமூர்த்தியுடன் ஆலோசனை நடத்திய பிறகே கூட்டணி தொடர்பாக அறிவித்திருந்தார். இந்த நிலையில், குருமூர்த்தி உடைத்திருக்கும் விடயங்கள் அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தவெக தலைவர் விஜய்

முன்னதாகவே மாநாட்டில் பேசிய விஜய், தங்கள் தலைமையை ஏற்று வருவோருக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருவோம் என்று கூட்டணி கதவை திறந்துவைத்தார். தொடர்ந்து, திமுகவுக்கும் தனக்கும்தான் போட்டி என்று களமாடி வரும் விஜய், அதிமுக - பாஜக கூட்டணி உருவானதையும் விமர்சனம் செய்திருந்தார். குறிப்பாக, தவெகவோடு அதிமுக கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துகிறது என்று தொடர்ச்சியாக தகவல் வெளியானது. அதற்கும் தவெக தரப்பில் இல்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில்தான், 90 தொகுதி.. துணை முதல்வர் பதவி என்று தவெக தரப்பு டிமாண்ட் வைத்ததால், வேறு வழி இல்லாமல் பாஜகவோடு அதிமுக கூட்டணி வைத்திருக்கிறது என்று பகிர்ந்திருக்கிறார் ஆடிட்டர் குருமூர்த்தி. மக்களவைத் தேர்தலில் உடைந்த அதிமுக பாஜக கூட்டணி, இப்போது மீண்டும் உருவாகியிருக்கும் நிலையில், அது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற உங்கள் கருத்தை கமெண்ட் செய்யுங்கள்.