எம்.ஜி.ஆருக்கு அணிவிக்கப்பட்ட காவித்துண்டு
எம்.ஜி.ஆருக்கு அணிவிக்கப்பட்ட காவித்துண்டு  File Image
தமிழ்நாடு

அதிமுக Vs பாஜக கூட்டணி முறிவு! "எம்ஜிஆருக்கு அணிவிக்கப்பட்ட காவித்துண்டு" கொந்தளித்த அதிமுகவினர்!

PT WEB

தமிழக அரசியலில் தற்போது பெரும் விவாத பொருளாக மாறியிருப்பது அதிமுக - பாஜக கூட்டணி முறிவு. இந்த கூட்டணி முறிவு தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சியினர் தொடர்ந்து தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். தமிழகத்தில் பா.ஜ.க, கட்சிகளுடன் சேர்ந்து தனி கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல அ.தி.மு.கவும் கூட்டணி தொடர்பாக பல்வேறு வியூகம் வகுத்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருது தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் அதிமுக துணை பொதுச் செயலாளர் இன்று செய்தியாளர் சந்திப்பின் போது "வருகின்ற 2026 ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிரடியாகக் கூறியுள்ளார்". அதேபோல எதிர்க் கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மாவட்டச் செயலாளர் கூட்டத்தின் போது பாஜக குறித்து இனி யாரும் பொது வெளியில் விமர்சனம் செய்யக் கூடாது எனக் குறிப்பிட்டிருந்தார்.

தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜகவும் - அதிமுகவும் தனித்தனியே கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதற்கு முன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விமர்சிக்கத் தொடங்கிய அண்ணாமலை பேச்சு கடைசியாக அண்ணாவை விமர்சித்தார். இது அதிமுகவினரை அதிருப்தியடையச் செய்தது.

இந்த விமர்சனம் ஒரு கட்டத்தில் பாஜக - அதிமுக முறிவிற்குக் காரணமாக அமைந்தது. இதனையடுத்து அதிமுக கூட்டணி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

எம்.ஜி.ஆர் சிலை

இந்த சூழலில் மீண்டும் அதிமுகவினரை பாஜகவினர் சீண்ட ஆரம்பித்துள்ளனர் என அதிமுக நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் இன்று செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ரவுண்டானாவில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் காவித்துண்டு போட்டுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த அ.தி.மு.கவினர் காவித்துண்டு அணிவித்த மர்மநபர்களைக் கைது செய்ய வலியுறுத்தி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அதிமுகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் போராட்டத்தைக் கைவிட்டுச் சென்றனர்.