தமிழ்நாடு

ஓபிஎஸ்க்கு ஆதரவாக ஜெ. நினைவிடத்தில் ஒப்பாரி வைத்து தீக்குளிக்க முயன்ற அதிமுக தொண்டர்!

ச. முத்துகிருஷ்ணன்

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக தொண்டர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், அதிமுக தொண்டர்கள் 50க்கும் மேற்பட்டோர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்றனர்.

அவர்கள் அனைவரும் காவல்துறையின் கட்டுப்பாட்டை மீறி, ஜெயலலிதா நினைவிடத்தில் ஒப்பாரி வைத்தனர். அப்போது அங்கிருந்த தொண்டர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவரை தடுத்து அவரிடமிருந்து பெட்ரோல் பாட்டிலை பறித்தனர்.

அப்போது பேசிய அவர், “பாஜகவை கேள்வி கேட்க துப்பில்லாத எடப்பாடி பழனிசாமியால்தான், ஊராட்சி மன்ற தேர்தல் உட்பட அனைத்திலும் தோல்வியை அதிமுக சந்தித்து பொதுச்செயலாளர் பதவிக்கு ஈபிஎஸ் தகுதியானவர் அல்ல. ஓபிஎஸ் தான் தகுதியானவர்” என்று தெரிவித்தார். பின்னர் அங்கிருந்த அனைவரையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.