தமிழ்நாட்டை பொறுத்தவரை நீட் தேவையற்றது. இரட்டை தலைமையின் கீழ் அதிமுக செயல்பட முடியாது. அதிமுக விரைவில் சசிகலா தலைமையின் கீழ் இயங்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
மயிலாடுதுறைக்கு வருகை புரிந்த காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறும்போது, "தமிழ்நாட்டை பொறுத்தவரை கொங்குநாடு என்று பிரிப்பதற்கு இப்போது யாரும் கோரிக்கை வைக்கவில்லை. அதனை காங்கிரஸ் கட்சியும் ஆதரிக்காது. இதனை ட்ரையல் பலூனாக வேறு ஏதோ காரணத்துக்காக விடுகிறார்கள்.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை நீட் என்பது தேவையற்ற ஒன்று, ஆனால் சட்டரீதியாக அதனை சந்திக்க வேண்டிய எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் தமிழ்நாடு உள்ளது. இந்த ஆண்டில் முடியாவிட்டாலும், அடுத்த ஆண்டு தமிழக அரசின் முயற்சி வெற்றி பெறும்.
யூனியன் ஒன்றிய அரசு என்று அழைப்பது தவறு என்று கூறுபவர்கள் ஆங்கிலம் தெரியாதவர்களாக இருப்பார்கள். யூனியன் பட்ஜெட் அதாவது ஒன்றிய பட்ஜெட் என்ற பெயரிலேயே பட்ஜெட் போடப்படுகிறது, யூனியன் மினிஸ்டர் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்றார்கள். ஆகவே ஒன்றிய அரசு என்று அழைப்பதில் தவறில்லை.
தற்போது பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசின் 3 தவறான முடிவுகளே காரணம். திடீர் பண மதிப்பிழப்பு, குழப்பமான ஜிஎஸ்டி, முன்னறிவிப்பில்லாத ஊரடங்கு காரணமாக அனைத்து தொழில்களும் முடங்கியது. தொழில்கள் மூலம் வரி வருவாய் வராத காரணத்தால் 130 கோடி மக்களிடம் வரி விதிக்கும் வகையில் பெட்ரோல், டீசல் வரியை விதித்துள்ளது.
வாஜ்பாய், அத்வானி காலத்திலிருந்து கட்சிக்காக போராடியவர்களை ஓரம் கட்டிவிட்டு தனக்கு விசுவாசமானவர்களுக்கு மட்டுமே மோடி பதவி வழங்கி உள்ளார். தேசிய கட்சிக்கு மாநிலத்துக்கு மாநிலம் கருத்துக்கள் மாறுபடும். தமிழகத்தை பொறுத்தவரை மேதாது பிரச்னையில் தமிழக அரசுக்கு உறுதுணையாக செயல்படும்.
இரட்டை தலைமையின் கீழ் அதிமுக செயல்பட முடியாது. தற்போது நடைபெறும் சூழ்நிலைகளை பார்க்கும்போது அதிமுக விரைவில் சசிகலா தலைமையின் கீழ் இயங்கும்" என்றார்.