இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணைய இறுதி விசாரணையை ஒத்திவைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் டிடிவி தினகரன் தரப்பினர் முறையிட்டுள்ளனர்.
அதிமுகவின் கட்சிப் பெயர் மற்றும் இரட்டை இலைச் சின்னம் யாருக்கு சொந்தம் என்பதை தீர்மானிக்கும் விவகாரத்தில், தேர்தல் ஆணையம் இன்று மாலை 3 மணிக்கு இறுதி விசாரணை நடத்துகிறது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஏ.கே. ஜோதி, தேர்தல் ஆணையர்கள் ஓம் பிரகாஷ் ராவத், சுனில் அரோரா முன்னிலையில் விசாரணை நடைபெறவுள்ளது. இந்நிலையில் இரட்டை இலை விவகாரத்தில் தேர்தல் ஆணைய இறுதி விசாரணையை ஒத்திவைக்கக் கோரி தினகரன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் ஆவணம் தாக்கல் செய்ய அவகாசம் வழங்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடுமாறும் அம்மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இரட்டை இலை விவகாரத்தில் கூடுதல் ஆவணம் தாக்கல் செய்ய அவகாசம் வழங்கக் கோரி தினகரன் தரப்பு தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.