செய்தியாளர் சந்தானகுமார்
சென்னை ராயப்பேட்டையில் எம்ஜிஆர் மாளிகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, கட்சிப் பணிகளை ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள குழுவுடன் ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில், மாவட்டம் வாரியாக கிளை, வார்டு, வட்ட கழகங்கள், சார்பு அமைப்புகளின் செயல்பாடுகளை நேரடியாக ஆய்வு செய்து, அவற்றின் பணிகளை மேம்படுத்த கருத்துகளைப் பெற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தல் பணிகளை கடமை உணர்வோடு விரைந்து ஆற்றுவது குறித்து கள ஆய்வுக் குழுவுக்கு எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை வழங்கியுள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிமுக உட்கட்சி செயல்பாடுகள் குறித்து நிர்வாகிகளிடம் பேசி, அவர்கள் தெரிவிக்கும் கருத்துகளை வெளிப்படைத்தன்மையுடன் தலைமைக்கு அறிக்கையாக வழங்க வேண்டும் கள ஆய்வு குழுவினருக்கு எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாவட்ட செயலாளர்கள் செயல்பாடு, சார்பு அணிகளின் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளின் செயல்பாடு, ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு நிலவரம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விசாரித்து உண்மை தன்மையுடன் அறிக்கை அளிக்க வேண்டும் எனவும், மாவட்ட செயலாளர்கள் செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை என்றாலும் அதனை பாரபட்சமின்றி கட்சி தலைமைக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கள ஆய்வு அளிக்கும் அறிக்கை மீது கட்சி உறுதியான நடவடிக்கை எடுக்கும் என்று எடப்பாடி பழனிச்சாமி உறுதியளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆலோசனைக் கூட்டத்தில் கே பி முனுசாமி, நத்தம் விசுவநாதன், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, ஜெயக்குமார், சி வி சண்முகம், செம்மலை, பா வளர்மதி, வரகூர் அருணாச்சலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். குழுவில் இடம்பெற்றுள்ள முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.