தமிழ்நாடு

”ஜெயலலிதா அறைக்குள் கொள்ளையடிக்க ஓபிஎஸ்க்கு எப்படி மனம் வந்தது?” - சிவி சண்முகம் கேள்வி

webteam

அதிமுக அலுவலகத்தின் அசல் பத்திரங்கள் காணவில்லை எனவும், ஜெயலலிதா அறைக்குள் புகுந்து கொள்ளையடிக்க எப்படி ஓபிஎஸ்-க்கு மனம் வந்தது என்றும் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் சிவி சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த மாதம் 11-ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, கட்சியின் கழக அமைப்புச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிவி சண்முகம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “கடந்த மாதம் 21ம் தேதி பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் மனுதாக்கல் செய்த நிலையில், நீதிமன்றம் பொதுக் குழுவை நடத்த அனுமதி அளித்ததால் ஆவேசம் அடைந்த ஓபிஎஸ், சென்னை ராயப்பேட்டையில் பூட்டப்பட்டிருந்த அதிமுக தலைமை அலுவலகத்தை தனது ஆதரவாளர்களுடன் புகுந்து பொருட்களை சேதப்படுத்தியும், அங்கு இருந்த பொருட்கள், பத்திரங்கள், பரிசு பொருட்கள், கட்சியின் பல்வேறு வகையான ஆவணங்கள் உள்ளிட்டவற்றை தனது ஆதரவாளர்களுடன் அத்துமீறி நுழைந்து கட்சி அலுவலகத்தின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து விட்டு சென்றார். முதலமைச்சராகிய மறைந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறையை உடைத்து, அங்கு இருந்து ஆவணங்கள் மற்றும் பரிசு பொருட்களை எடுத்துச் செல்ல ஓபிஎஸ்-க்கு எப்படி மனம் வந்தது” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் அவர் மீதும் சம்பவத்தில் ஈடுபட்ட அவரது ஆதரவாளர்கள் மற்றும் குண்டர்கள் மீதும், சட்டப்படி நடவடிக்கை எடுக்க புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார். அத்துடன் ரிசர்வ் வங்கிக்கு ஓபிஎஸ் அதிமுக வங்கி கணக்குகளை முடக்க எழுதியுள்ள கடிதம் குறித்த கேள்விக்கு, ஓபிஎஸ் ஐநாவுக்கு கூட கடிதம் எழுதட்டும் என தெரிவித்த அவர், கட்சியின் பொருளாளர், அதிமுக தலைமை கழக அலுவலகத்தின் பத்திரங்களை எடுத்துச் சென்றது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.