அரசியல் களத்தில் சட்டென்று வானிலை மாறுவது வழக்கம்தான் என்றாலும், இந்த வாரம் அடுத்தடுத்து மூன்று புயல்கள் உருவாகி, கட்சிகளுக்கு கடும் சேதத்தை விளைவித்துள்ளன.
முதல் புயல் ஏற்பட்டது அதிமுகவில். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்ததோடு, கட்சி பொதுச்செயலருக்கே கெடு விதித்தார் மூத்த தலைவர் செங்கோட்டையன். இதனால் எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதி என்றும் பாராமல், அமைப்புச் செயலர் செங்கோட்டையனின் அனைத்து கட்சிப் பொறுப்புகளையும் பறித்தார் பழனிசாமி. இதனைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்களும் அடுத்தடுத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டனர்.
இரண்டாவது புயல் ஏற்பட்டது, நாடாளுமன்ற புயல் என்று வர்ணிக்கப்படும் வைகோவின் மதிமுகவில். முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கும், துணை பொதுச்செயலர் மல்லை சத்யாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு, வைகோ தலையிட்டும் முடிவுக்கு வரவில்லை. ஒரு கட்டத்தில் வைகோ, மல்லை சத்யாவை ‘துரோகி’ என்றார். பதிலுக்கு சத்யா, ‘மதிமுக, மகன் திமுக ஆகிவிட்டது’ என்றார். இந்நிலையில்தான், மல்லை சத்யாவை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பியிருந்தும் நிரந்தரமாக நீக்கி வைகோ உத்தரவிட்டார்.
மூன்றாவதாக புயல் பாமகவில் பெரும் பிரளயத்தையே ஏற்படுத்திவிட்டது. ஏற்கெனவே கட்சியின் நிறுவனர் ராமதாஸும், தலைவர் அன்புமணியும் மாறிமாறி கட்சி நிர்வாகிகளை நீக்கியும், சேர்த்தும் உத்தரவிட்டு வந்தார்கள். ஒருகட்டத்தில் இனி நான்தான் பாமக தலைவர்; அன்புமணி செயல் தலைவர் மட்டும்தான் என்று அறிவித்தார் ராமதாஸ். போட்டி பொதுக்குழு நடத்தும் அளவுக்குப் பிரச்சினை பூதாகரமானதால், அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளை அடுக்கி, அதற்கு விளக்கமளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பினார் ராமதாஸ். பதிலளிக்க 2முறை அவகாசம் அளித்தும் அன்புமணி அதனை கண்டுகொள்ளவே இல்லை. இதனால் கடும் கோபத்திற்கு ஆளான ராமதாஸ், அன்புமணியை கட்சியை விட்டே நீக்கியதோடு, வேண்டுமானால் தனிக்கட்சி தொடங்கிக்கொள்ளலாம் என்றும் அறிவித்துவிட்டார்!