தமிழ்நாடு

ஜெயலலிதா நினைவிடம் செல்ல போலீஸ் பாதுகாப்பு கேட்டு சசிகலா, அதிமுக தலைவர்கள் மனு

kaleelrahman

அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் சசிகலா மற்றும் அதிமுக தலைவர்கள் மரியாதை செலுத்த உள்ள நிலையில், 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் சசிகலா நாளை சென்று மரியாதை செலுத்த இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு கேட்டு சசிகலா சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

அதேபோல் வருகிற 17ஆம் தேதி அதிமுகவின் பொன்விழா ஆண்டையொட்டி அன்று காலை 10.30 மணியளவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக நிர்வாகிகள் நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்த இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு கேட்டு, அதிமுக வடசென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் பாலகங்கா, மற்றும் வழக்கறிஞர் பாபு முருகவேல் ஆகியோர் இன்று காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இதையடுத்து 16 மற்றும் 17ஆம் தேதிகளில் மரியாதை செலுத்த சசிகலா மற்றும் அதிமுக தலைவர்கள் செல்ல இருப்பதால் எந்தவித அசாம்பாவிதமும் நிகழாமல் தடுக்க 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.