தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் கே. பழனிசாமி தலைமையிலான அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. பாஜக உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைத்திருந்தாலும் 47 இடங்களில் மட்டுமே வென்றிருக்கிறது அதிமுக. இந்தசூழலில், கே. பழனிசாமி தலைமை மீதான அதிருப்தியில், எஸ்.பி. வேலுமணி தரப்பு ஆட்சியமைக்க தவெகவுக்கு ஆதரவளித்திருந்தது. எனினும், இருதரப்பிடையேயும் தற்போது, சமாதானம் ஏற்பட்டிருக்கிறது.
ஆனாலும், அதிமுக எம்.எல்.ஏ-கள் 4 பேர் தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கின்றனர். இதையடுத்து, தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாடி வருகின்றனர். எனினும், அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்தவகையில் இன்று, அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான எம்சி சம்பத், கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் முன்னிலையில் இன்று அக்கட்சியில் இணைந்துள்ளனர்.
இந்தநிலையில் தான், அதிமுகவினர் தொடர்ந்து தவெகவில் இணைந்து வருவது குறித்து, தவெக தரப்பில் இருந்தும், அதிமுக தரப்பில் இருந்தும் இரண்டு மாறுபட்ட கருத்து எழுந்திருக்கிறது.
அதிமுகவினர் தவெகவினர் இணைவது குறித்துப் பேசியுள்ள அமைச்சர் நிர்மல்குமார், ”கேபினட் அமைச்சர் பதவி கொடுத்தால் அதிமுகவை பாஜகவில் இணைக்கும் நிலைமையில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்; ராஜ்யசபா சீட் தந்தால் திமுகவில்கூட கட்சியை இணைக்கும் நிலையில் இருக்கிறார். அதேபோல, அதிமுக தலைமையிடம் ஸ்திரத்தன்மை இல்லை. எனவே, கட்சித் தலைமை கைவிட்டதால் பலர் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைகின்றனர். 40, 50 ஆண்டுகளாக அதிமுகவில் பணி செய்தவர்கள் தற்போது அதனை கைவிடப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்திருக்கிறார்.
அதேசமயம், இது குறித்துப் பேசியுள்ள அதிமுக மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான பொன்னையன், ”அதிமுக பொதுச்செயலாளர் கே. பழனிசாமி தலைமையில் அதிமுக தொண்டர்கள் உறுதியாக இருக்கிறார்கள். ஆனால் சில முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் பணத்துக்காகவும் பதவி ஆசைக்காகவும் அங்கும் இங்கும் அலைந்து திரிகிறார்கள். இதனால், அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” எனத் தெரிவித்திருக்கிறார்.
இவ்வாறு, அதிமுகவினர் பலர் தவெகவில் இணைவது குறித்து, அதிமுக தரப்பில் இருந்தும், தவெக தரப்பில் இருந்தும் இருவேறுபட்ட கருத்துக்கள் எழுந்திருக்கின்றது.