கரூர் வழக்கை முன்னிட்டு முதல்வர் விஜயின் பேச்சை அதிமுக கடுமையாக விமர்சித்துள்ளது. BLASTU BLASTU என்ற ஜனநாயகக் குத்தாட்டம் போட்டவர் எங்களை கூட்டுக் களவாணிகள் என குற்றம்சாட்டுவது எப்படி என அதிமுக கேட்கிறது. கரூர் வழக்கில் சிபிஐ விசாரணை முடிவே மக்களுக்கு உண்மையை காட்டும் எனவும் அதிமுக தெரிவிக்கிறது.
திமுக கூட்டணிக் கட்சிகளை இழுத்து, கூட்டுக் களவாணித்தனம் செய்து ஆட்சியில் அமர்ந்திருக்கும் முதல்வர் விஜய், தங்களைப் பார்த்து கூட்டுக் களவாணிகள் என்பதா? என்று அதிமுக ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளது.
விஜய்யின் கரூர் பேச்சுக்கு எதிர்வினையாற்றியுள்ள அதிமுக, அதன் எக்ஸ் தள பக்கத்தில் காட்டமான விமர்சனங்களை முன்வைத்துள்ளது. அதில், கரூருக்கு தாமதமாக வந்துவிட்டேன், மன்னித்து விடுங்கள் என்று சொல்லக்கூட மனமில்லாத ஒருவர் எப்படி தலைவராக இருக்க முடியும்? என்று வினவியுள்ளது. மிட்டாய்க்கு குழந்தை அடம்பிடிப்பது போலவே, ஓட்டுக்கு பெற்றோரிடம் அடம்பிடியுங்கள் என்று கூறி தவறான வழியில் வாக்கு கேட்டவர் விஜய் எனவும் அதிமுக சாடியுள்ளது.
கரூர் துயரம் நடந்து மூன்றே மாதங்களில் மலேசியாவில் BLASTU BLASTU என்ற ஜனநாயகக் குத்தாட்டம் போட்ட நீங்கள், எங்களைப் பற்றி பேசுவதா? எனவும் அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது. கரூர் வழக்கில் விஜய் சொல்வது மட்டுமே வேதவாக்கு அல்ல எனவும், சிபிஐ விசாரணையின் முடிவில் உண்மை மக்களுக்கு தெரியவரும் எனவும் அதிமுக குறிப்பிட்டுள்ளது. முதல்வர் விஜய் பேசக்கூடாத மொழியில் பேசுவது வெட்கக்கேடு என்றும் அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.