தமிழ்நாடு

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் : தேர்தல் ஆணையத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

ச. முத்துகிருஷ்ணன்

இபிஎஸ் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் திங்கள்கிழமை நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணையத்தில் அளித்துள்ள நிலையில், அந்த ஆவணங்களை ஓபிஎஸ் தரப்பு அளித்துள்ள புகாருடன் சேர்த்து பரிசீலிக்க தேர்தல் ஆணைய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் சட்டவிரோதமானவை என ஓபிஎஸ் தரப்பு வலியுறுத்தும் நிலையில், அந்த தீர்மானங்களுக்கு 2,428 பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளனர் என சி.வி.சண்முகம் தாக்கல் செய்த ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சி.வி.சண்முகம் தாக்கல் செய்த ஆவணங்கள் மற்றும் ஓபிஎஸ் தரப்பு புகார்கள் இரண்டும் தொடர்புடையவை என்பதால் ஒன்றாகவே பரிசீலிக்க தேர்தல் ஆணையம் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அதிமுக உட்கட்சி பூசல் தொடர்பான புகார்கள் மற்றும் ஆவணங்களை பரிசீலனை செய்யும் பணியை தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டனர். முதலில் மின்னஞ்சல் மூலம் தாக்கல் செய்த ஆவணங்களை தற்போது சி.வி.சண்முகம் டில்லி பயணித்து நேரில் தாக்கல் செய்துள்ளார். தீர்மானங்களுக்கு 2,428 பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பு சமாஜ்வாதி உட்கட்சி பூசல் தேர்தல் ஆணையத்துக்கு வந்தபோது, கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அகிலேஷ் யாதவ் பக்கம் இருப்பது ஆவணப்படுத்தப்பட்டு சமர்பிக்கப்பட்டதால், தீர்ப்பு அவருக்கு சாதகமாக இருந்தது. அதே போல் முன்பு அதிமுக உட்கட்சி பூசல் தினகரன்-ஓபிஎஸ் மோதலாக தேர்தல் ஆணையம் வந்தபோதும் விரிவான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டது. ஆகவேதான் திங்கட்கிழமை நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பான ஆவணங்களை இபிஎஸ் தரப்பு தேர்தல் ஆணையத்தில் நேரில் தாக்கல் செய்துள்ளது.

ஏற்கனவே மின்னஞ்சல் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட இந்த ஆவணங்களை தற்போது தேர்தல் ஆணைய அதிகாரிகள் பரிசீலனை செய்து கொண்டிருக்கிறார்கள். அதேபோல் ஓபிஎஸ் தரப்பு சமர்ப்பித்துள்ள புகாரும் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.விரைவில் இரண்டு தரப்பினருக்கும் நோட்டீஸ் அனுப்புவது தொடர்பாக ஆலோசனை தற்போது நடைபெற்று வருகிறது.

என்ன விளக்கங்கள் கோர வேண்டும் மற்றும் பதில் அளிக்க எத்தனை நாள் அவகாசம் அளிக்க வேண்டும் என்பது குறித்து அதிகாரிகள் பல்வேறு விதிகள் தொடர்பான அம்சங்களை பரிசீலனை செய்து வருகிறார்கள். விரைவில் ஓபிஎஸ் தரப்பும் நேரில் தேர்தல் அதிகாரிகளை சந்தித்து புகார் மனு சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நோட்டீஸ் அளிக்கப்பட்டு, இரண்டு பக்கங்களும் அவரவர் நோட்டீசுக்கு பதில் அளித்த பிறகு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்க தேர்தல் ஆணைய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

- கணபதி சுப்ரமணியம்