சி.விஜயபாஸ்கர், ஜே.சி.டி.பிரபாகர் புதிய தலைமுறை
தமிழ்நாடு

எம்எல்ஏ பதவியிலிருந்து விலகல்.. விஜயபாஸ்கரின் அடுத்த திட்டம் என்ன? தொடர் சரிவில் அதிமுக!

அதேநேரத்தில் தொடர் பேச்சுவார்த்தைக்குப் பிறகு 21 எம்எல்ஏக்களும் மன்னிப்பு கடிதம் கொடுத்ததால் அவர்கள் மீதான நடவடிக்கையை எடப்பாடி பழனிசாமி திரும்பப் பெற நடவடிக்கை எடுத்தார்.

Prakash J

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தனது விராலிமலை தொகுதியின் எம்.எல்.ஏ. பதவியிலிருந்து விலகியுள்ளார். இதனால், அதிமுக கூடாரம் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றிய தவெக, பிற கட்சிகளுடன் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்தது. இந்த தேர்தலில் பெருத்த தோல்வியடைந்த அதிமுக 3-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டது. இதனால் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி. வேலுமணி தலைமையில் தனி அணி உருவானது. சட்டசபையில நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் இந்த அணியை சேர்ந்த 25 எம்எல்ஏக்கள் த.வெ.க. அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனையடுத்து அவர்களை தகுதிநீக்கம் செய்ய எடப்பாடி பழனிசாமி தரப்பு சபாநாயகரிடம் மனு கொடுத்தது. இதற்கிடையே அதிமுகவில் இருந்து போட்டியிட்ட பெருந்துறை ஜெயக்குமார், மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா, சத்தியபாமா ஆகியோர் தங்கள் பதவியில் இருந்து விலகி தவெகவில் இணைந்தனர்.

எடப்பாடி பழனிசாமி

அதேநேரத்தில் தொடர் பேச்சுவார்த்தைக்குப் பிறகு 21 எம்எல்ஏக்களும் மன்னிப்பு கடிதம் கொடுத்ததால் அவர்கள் மீதான நடவடிக்கையை எடப்பாடி பழனிசாமி திரும்பப் பெற நடவடிக்கை எடுத்தார். இதற்கிடையே அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் எனப் பலரும் விலகி தொடர்ந்து தவெகவில் இணைந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக விமர்சித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அதில், தலைமை என்பது அதிகாரமோ, ஆணவமோ அல்ல…‘அர்ப்பணிப்பு மிகுந்த அரவணைப்பு’உழைக்கும் தொண்டர்களின் மனதை வெல்ல முடியாத தலைமை, மக்களின் மனதை எப்படி வெல்லும்? உணர்வுகளை மதிக்காத இடத்தில் உண்மையான பயணம் சாத்தியமா’ எனப் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில், அவர் தனது எம்.எல்.ஏ. பதவியிலிருந்து விலகியுள்ளார். விராலிமலை தொகுதியிலிருந்து போட்டியிட்ட அவர், 4ஆவது முறையாக அவர் எம்.எல்.ஏவாகத் தேர்வு செய்யப்பட்டார். இத்தகைய சூழலில் அவர் தனது எம்.எல்.ஏ. பதவி விலகல் கடிதத்தை சபாநாயகரிடம் வழங்கியிருந்தார்.

இதையடுத்து, அவரது பதவி விலகலை ஏற்பதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரும் அறிவித்துள்ளார். இதனால், தமிழகத்தில் 6 தொகுதிகள் காலியாகி உள்ளன. இதில், விஜய் போட்டியிட்ட திருச்சி கிழக்குத் தொகுதியும் அடங்கும். விரைவில் இந்தத் தொகுதிகளில் இடைத்தேர்தல் வரவிருப்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில், சி.விஜயபாஸ்கர் விரைவில் தவெகவில் இணையலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பதவி விலகல் தொடர்பாக சி.விஜயபாஸ்கர், “இது முடிவல்ல... தொடக்கம்தான்” என ஆடியோ வெளியிட்டுள்ளார். இன்னொரு புறம் சமீபகாலமாக, அதிமுகவைச் சேர்ந்தவர்களே தவெகவில் அதிகளவில் இணைந்துவருகின்றனர். இதனால், அதிமுகவின் கோட்டை சரிவைக் கண்டிருப்பதாக அரசியல் ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.