தமிழகத்தில் பாஜக ஒரு போதும் காலூன்ற முடியாது என அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா பேசியிருப்பது பேசு பொருளாகியுள்ளது. பாஜக - அதிமுக கூட்டணி உறுதி செய்யப்பட்ட நாள் முதல், இரு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் அவ்வப்போது மாறுபட்ட கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். கூட்டணி ஆட்சி என பாஜக கூறிவரும் நிலையில், அதற்கு மாறான கருத்தை அதிமுக கூறி வருகிறது. இந்த நிலையில் இந்து தமிழ் நாளிதழுக்கு அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் காலூன்றத்துடிக்கும் பாஜகவின் எண்ணம் ஒருபோதும் நடக்காது என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை கூட்டணிக்கு தலைமை தாங்கப்போவது அதிமுக தான், இதை பாஜக ஏற்கவில்லை என்றால் இரு கட்சிகளுக்குமான ஒருங்கிணைப்பு சாத்தியமில்லை என தெரிவித்தார். அதிமுக - விஜயுடன் கூட்டணி வைத்திருக்கலாமே என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், கூட்டணி என்பது இரு கட்சித்தலைவர்கள் இடையேயான உடன்பாடு. எனவே எங்களுடன் கூட்டணி ஏற்படுவதற்கு விஜயின் ஒத்துழைப்பும் அவசியம் தேவைப்படுவதாக தெரிவித்தார்.