தமிழ்நாடு

அதிமுக செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம்: முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் எனத் தகவல்

webteam

அதிமுகவின் மண்டலப் பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோருடன் சட்டப்பேரவைத் தேர்தல் பணி தொடர்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆலோசனை நடத்தவுள்ளனர்.

அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் காலையில் சென்னை அடுத்த வானகரத்தில் நடைபெறவுள்ளது. இதன் பின்னர் பிற்பகல் 4:30 மணி அளவில் அதிமுக தலைமை அலுவலகத்தில் மண்டலப் பொறுப்பாளர்கள், அமைச்சர்கள், மற்றும் மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் தேர்தலை ஒட்டி மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் 20ஆம் தேதி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வழங்கப்பட்ட ஆலோசனைகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளன.

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜகவுடன் கூட்டணி தொடரும் அதிமுக தலைமை அறிவித்துள்ளது. அதேநேரத்தில் முதல்வர் வேட்பாளர் குறித்து பாஜக பல்வேறு கருத்துகளை கூறிவருகிறது. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் முதல்வர் வேட்பாளர் குறித்து மவுனமாகவே உள்ளன. இச்சூழலில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று அதிமுக பொதுக்குழு கூடுகிறது. இதில், எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என்றும், கூட்டணி தொடர்பான முக்கிய விஷயங்களில் முடிவு எடுப்பதற்கான அதிகாரத்தை ஓ.பி.எஸ். ஈ.பி.எஸ்.க்கு வழங்கியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் எனத் தெரிகிறது.