அதிமுக தொகுதிப்பங்கீட்டு குழு, பிரேமலதா விஜயகாந்த்
அதிமுக தொகுதிப்பங்கீட்டு குழு, பிரேமலதா விஜயகாந்த் pt web
தமிழ்நாடு

அதிமுக - தேமுதிக கூட்டணி உறுதி; தொகுதிகள் என்னென்ன?

Angeshwar G

மக்களவைத் தேர்தல் பரபரப்பு தேசம் முழுவதும் எதிரொலிக்கும் சூழலில், மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது. இத்தகைய சூழலில் தமிழ்நாட்டில் அதிமுக - தேமுதிக கூட்டணி இறுதியாகியுள்ளது. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, 4 மக்களவைத் தொகுதி மற்றும் ஒரு ராஜ்ய சபா தொகுதி வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் என்று தகவல் வெளியானது. ஆனால் அதிமுக அதற்கு தயாராக இல்லை என கூறப்பட்டது.

EdappadiPalaniswami DMDK

இந்த நிலையில்தான் அதிமுக - தேமுதிக கூட்டணி இறுதியாகியுள்ளது. நாளை மறுதினம் (மார்ச் 20) தொகுதி பங்கீட்டுக்கான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.

அதிமுக தேமுதிக இடையே கிட்டத்தட்ட இரண்டு கட்டபேச்சுவார்த்தைகள் நடைபெற்ற சூழலில், மறைமுக பேச்சுவார்த்தையும் ஒருமுறை நடைபெற்றது. அதையடுத்து அதிமுக தேமுதிக கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளது. தேமுதிகவிற்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும் ராஜ்யசபா வேண்டும் என்ற நிலையில் இருந்து தேமுதிக இறங்கி வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதேசமயத்தில், 4 தொகுதிகளிலும் தேமுதிக வெற்றி பெற்றால் ராஜ்யசபா கொடுப்பதாக அதிமுகவும் உறுதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியில் தேமுதிகவும் இணைந்திருந்தது. அப்போது, விருதுநகர், கள்ளக்குறிச்சி, திருச்சி, வடசென்னை என 4 தொகுதிகளில் தேமுதிக போட்டியிட்டது.

தற்போது, விருதுநகர், கள்ளக்குறிச்சி, திருச்சி போன்ற தொகுதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

வட சென்னைக்கு பதிலாக கடலூர் அல்லது கிருஷ்ணகிரி போன்ற தொகுதிகள் கேட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல பாமக உடனான அதிமுக-வின் கூட்டணியும் விரைவில் இறுதியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மார்ச் 20-ம் தேதி (நாளை மறுதினம்) பாமக, தேமுதிக உடனான கூட்டணி ஒப்பந்தத்தில் அதிமுக கையெழுத்திடும் எனக் கூறப்படுகிறது.