அதிமுக - தேமுதிக கூட்டணி
அதிமுக - தேமுதிக கூட்டணி  pt web
தமிழ்நாடு

”நாளை மிகப்பெரிய அறிவிப்பு இருக்கு” அதிமுக-தேமுதிக இடையே 5 சீட் ஒப்பந்தம்.. ட்விஸ்ட் வைத்த பிரேமலதா!

PT WEB

மக்களவைத் தேர்தல் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அனைத்து கூட்டணிகளும் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்திற்கு தயாராகி வருகின்றன. அதிமுக முகாம் கூட்டணி குறித்தான பேச்சுவார்த்தைகள் இன்றி காணப்பட்டது. பாமக, அதிமுக உடன் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்த்த நிலையில் பாஜக உடன் கூட்டணி அமைத்தது பாமக. அக்கூட்டணியில் பாமகவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இத்தகைய சூழலில், இன்று தேமுதிக உடன் கூட்டணி அமைத்த அதிமுக தனது கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

அதிமுக தேமுதிக கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி மற்றும் தொகுதிப்பங்கீடு ஒப்பந்தத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கையெழுத்திட்டனர். அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் தனி, மத்திய சென்னை, கடலூர், தஞ்சாவூர், விருதுநகர் என 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “முதன்முறையாக அதிமுக தலைமை அலுவகத்திற்கு வந்துள்ளதை மகிழ்ச்சியாக கருதுகிறேன். 2011ல் ஏற்பட்ட மாபெரும் வெற்றிக் கூட்டணி மீண்டும் உருவாகியுள்ளது. அந்த வெற்றி இந்த பாராளுமன்ற தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், 2026 சட்டமன்ற தேர்தலிலும் தொடரும், கூட்டணியும் தொடரும். அதிமுக தலைவர்கள் நாளை தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு வருவார்கள். மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று வெளிவரும்” என தெரிவித்துள்ளார். ஏற்கனவே விருதுநகர் மக்களவைத் தொகுதியில் விஜய பிரபாகரன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.